×

திருச்சி அருகே 2 மாதத்திற்கு முன் மாயமான தொழிலாளிகள் அழுகிய நிலையில் கிணற்றில் சடலமாக மீட்பு

*ஒருவரது உடலில் தலை இல்லாததால் பரபரப்பு

லால்குடி : திருச்சி அருகே 2 மாதத்திற்கு முன் மாயமான செங்கள் சூளை தொழிலாளிகள் அழுகிய நிலையில் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டது. இதில் ஒருவரது உடலில் தலை இல்லாததால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்த ஆதிகுடி கிராமத்தில் ஒரு தோட்டத்தில் 30 அடி ஆழ கிணறு உள்ளது.

பயன்பாடு இல்லாமல் இருக்கும் இந்த கிணற்றில் சுமார் 10 அடி ஆழத்துக்கு தண்ணீர் உள்ளது. தண்ணீரில் பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவு பொருட்கள் மிதக்கின்றன. இந்நிலையில் இந்த கிணற்றிலிருந்து நேற்றுமுன்தினம் மாலை கடும் துர்நாற்றம் வீசியது. இதுபற்றி அந்த வழியே சென்றவர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் லால்குடி டிஎஸ்பி ராஜமோகன், இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் போலீசார், லால்குடி தீயணைப்பு நிலைய வீரர் பிரபு தலைமையிலான வீரர்கள் 6.30 மணியளவில் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.

கிணற்று அருகே 2 கைலி, 2 டிசர்ட், 2 ஜோடி செருப்புகள், ஒரு செல்போன், அரிவாள், கடப்பாரை இருந்ததும், கிணற்றுக்குள்ளே அழுகிய நிலையில் 2 ஆண்களின் உடல்கள் மிதந்ததும், உடல்கள் தலைகுப்புறாக கிடந்ததும், அதில் ஒருவரது உடல் தலையின்றி கிடந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து கிணற்றுக்குள்ளே இறங்கிய வீரர்கள் இரவு 11.30 மணியளவில் 2 உடல்களை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். பின்னர் போலீசார், பிரேத பரிசோதனைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில், சடலமாக மிதந்தவர்கள் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பகுதி சேர்ந்த வெற்றிமணி (40), ஈரோடு மாவட்டம் பள்ளக்காட்டு தோட்டம் சூலூர், மொடக்குறிச்சி பகுதியை சேர்ந்த வீரமணி (29) என தெரியவந்தது.

இதில் கைப்பற்றப்பட்ட கைலி, டிசர்ட் உள்ளிட்ட பொருட்களை போட்டோ எடுத்து இருவரது உறவினருக்கும் போலீசார் அனுப்பி வைத்து இறந்து கிடந்தது அவர்கள் தான் என உறுதிப்படுத்தினர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுபற்றி போலீசார் கூறுகையில், இருவரும் திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பச்சாம்பேட்டை கிராமத்தில் தங்கி அங்குள்ள செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்துள்ளனர். வெற்றிமணிக்கு மனைவி மாரியம்மாள், 3மகன்கள், ஒரு மகள் உள்ளனர். வீரமணிக்கு மனைவி சௌந்தர்யா, ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர்.

உறவினர்களான இருவரும் கடந்த மே 3ம் தேதி ஊருக்கு செல்வதாக செங்கல் சூளை உரிமையாளரிடம் கூறி விட்டு சென்றுள்ளனர். இரண்டு நாட்கள் ஆகியும் மீண்டும் பணிக்கு வரவில்லை, ஊருக்கு செல்லவில்லை. இதனால் சந்தேகமடைந்த வெற்றிமணியின் மனைவி மாரியம்மாள் மே 9ம்தேதி கடலூர் மற்றும் லால்குடி காவல் நிலையத்தில் கணவர் மற்றும் உறவினர் மாயமானமாக புகார் கொடுத்துள்ளார்.

போலீசார் இருவரையும் தேடி வந்த நிலையில் பச்சாம்பேட்டையில் வேலை பார்த்த இடத்திலிருந்து 30கி.மீ. தூரம் உள்ள கிணற்றில் சடலமாக கிடந்துள்ளனர். யாருடனாவது தகராறு ஏற்பட்டு அவர்கள் கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டிருக்கலாம் அல்லது தற்கொலை செய்து கொண்டிருக்கலாம்.

இதுதொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது என்றனர். கடந்த மே 3ம்தேதி மாயமான இருவரையும் போலீசார் தேடி வந்த நிலையில் அவர்களது உடல்கள் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

2வது நாளாக தலையை தேடிய போலீஸ்

உடல்கள் அழுகி இருந்ததால் தீயணைப்பு வீரர்கள் கடும் துர்நாற்றத்தையும் பொறுத்துக்கொண்டு அந்த பாழுதடைந்த கிணற்றில் 5 மணி நேரமாக போராடி இருவரது உடல்களை மீட்டனர். இதில் ஒருவரது உடலில் மட்டும் தலை இருந்தது. மற்றொருவரின் உடலில் தலை இல்லாமல் இருந்தது. அந்த ஒருவரது தலையை தேடியும் கண்டு பிடிக்க முடிய வில்லை. பின்னர் இரவு நேரமானால் தேடும் பணி கைவிடப்பட்டது.

இந்த நிலையில் 2வது நாளாக நேற்று காலை தீயணைப்பு வீரர்கள் மீண்டும் பாழுதடைந்த கிணற்றில் இறங்கி தொழிலாளி ஒருருவரின் தலையை நீண்ட நேரம் போராட்டத்துக்கு பின்தேடி கண்டு பிடித்தனர். இதில் உடல்கள் அடையாளம் காண முடியாத நிலையில் இருந்ததால் அது யாருடைய தலை என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Trichy ,Lalgudi ,
× RELATED தமிழ்நாடு அரசு பள்ளிகளில்...