×

கரடுமுரடாக காட்சியளிக்கும் கருங்குளம் மலைக்கோயில் சாலை

*பக்தர்கள், பொதுமக்கள் கடும் சிரமம்

*தார்ச்சாலையாக சீரமைக்க கோரிக்கை

செய்துங்கநல்லூர் : நெல்லை- திருச்செந்தூர் சாலையில் தாமிரபரணி ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள கருங்குளம் வகுளகிரி மலையில் பழமையான வெங்கடாசலபதி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் மூலவர் சந்தனக்கட்டை வடிவில் காட்சியளிப்பது தனிச்சிறப்பாகும்.

திருப்பதிக்குச் செல்ல இயலாத பக்தர்கள், கருங்குளம் வெங்கடாசலபதி கோயிலில் வழிபட்டால் வேண்டுதல்கள் நிறைவேறும் என்ற நம்பிக்கையால், தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர்.

குறிப்பாக புரட்டாசி சனிக்கிழமைகள், சித்ரா பவுர்ணமி உள்ளிட்ட விழா காலங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலைப்பாதை வழியாக வாகனங்களில் சென்று சுவாமி தரிசனம் செய்வது வழக்கமாக உள்ளது. மலை உச்சிக்கு செல்ல 100க்கும் மேற்பட்ட படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

இவற்றில் வயதானவர்கள் ஏறிச் செல்ல சிரமம் இருப்பதால், இருபுறமும் கைப்பிடி வசதி ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக இருந்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு கோயிலின் பின்புறம் மலைப்பாதை சாலை அமைக்கப்பட்டு வாகன வசதியும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

ஆனால் மழை மற்றும் பராமரிப்பு இல்லாத காரணங்களால் இந்த மலைப்பாதை சாலை தற்போது மேடு, பள்ளங்களாக மாறி போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் காட்சியளிக்கிறது.

இதனால் வாகனங்கள் பாதுகாப்பாக செல்ல முடியாத நிலை உருவாகி இருப்பதுடன் பக்தர்களும் பெரும் அச்சத்துடன் பயணம் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்த மலைப்பகுதியில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்களும் அன்றாடம் இந்த சாலையையே பயன்படுத்தி வருவதால், பள்ளி மாணவர்கள், முதியவர்கள், அவசர மருத்துவ தேவையுள்ளவர்கள் உள்ளிட்ட அனைவரும் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

இதுகுறித்து பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை சம்பந்தப்பட்ட துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று இப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

எனவே கருங்குளம் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட பொறியாளர்கள் நேரில் ஆய்வு மேற்கொண்டு, பக்தர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் சேதமடைந்த மலைப்பாதையை உடனடியாக தரமான தார்ச்சாலையாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பக்தர்கள், பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

‘‘கலெக்டரிடம் முறையிடுவோம்”

இதுகுறித்து ராஜப்பா வெங்கடாச்சாரி கூறுகையில், கருங்குளம் வகுளகிரி மலையில் உள்ள வெங்கடாசலபதி கோயிலுக்கு செல்லும் மலைப்பாதை பல ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாமல் மிகவும் மோசமான நிலையில் உள்ளது.

இதனை சீரமைக்கக் கோரி பல முறை கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர். இனியும் நடவடிக்கை எடுக்கவில்லை எனில் மாவட்ட கலெக்டரிடம் முறையிடுவோம். கோயிலுக்கு செல்லும் மலைப்பாதையை புதிய தார்ச்சாலையாக அமைக்க வேண்டும். சம்பந்தப்பட்ட துறையினர், அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டு இப்பணியை விரைந்து தொடங்க வேண்டும், என்றார்.

Tags : Venkatachalapathi temple ,Karangulam Wakulagiri hill ,Tamiraparani River ,Nella-Tiruchendoor road ,
× RELATED தமிழ்நாடு அரசு பள்ளிகளில்...