கிருஷ்ணகிரி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் கிருஷ்ணகிரியில் நிருபர்களிடம் கூறியதாவது: ஏற்கனவே ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி, அரசுக்கு எதிராக போட்டி அரசாங்கத்தை நடத்தினார். அதனை எதிர்த்து பல கட்ட போராட்டங்களை நடத்தினோம். ஆளுநருக்கு ஏதாவது கருத்து இருந்தால், அதை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு காண வேண்டுமே தவிர, தன்னிச்சையாக செயல்படுவது, அரசியல் சாசனம் அவருக்கு வழங்கியுள்ள அதிகாரத்திற்கு எதிரானது. ஆளுநரின் அந்த அணுகுமுறை ஏற்கத்தக்கதல்ல. கரூர் சம்பவம் நெரிசலால் ஏற்பட்ட மரணம். அந்த நெரிசலுக்கு யார் காரணமாக இருந்தாலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாங்கள் அப்போதே சொல்லியிருக்கிறோம். அதுதான் இப்போதும் எங்கள் நிலைப்பாடு.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களை, எந்த கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தாலும், இதுபோன்று விலை பேசுவது தவறான செயல். இதுபோன்ற போக்குகள் தவறானது என ஏற்கனவே தவெக தலைமையிடம் நாங்கள் சொல்லியிருக்கிறோம். இப்போதும் அதைத் தான் சொல்கிறோம். இது போன்று விலை பேசுவது, பேரம் பேசுவது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டால் யாராக இருந்தாலும் தவறு. கடந்த காலங்களிலும் வழக்குகள் உள்ளவர்களை, கட்சி மாறி மாறி சேர்த்து கொள்வது என்பது நடந்துள்ளது. இப்போதும் தொடர்கிறது. ஆளுங்கட்சியில் சேர்ந்துவிட்டார் என்பதற்காக அவர் மீது வழக்குகளை முறையாக நடத்தாமல் இருப்பதும், அவரை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டால் அது தவறானது. இதுபோன்ற செயலில் தவெக ஈடுபடக்கூடாது. இவ்வாறு சண்முகம் கூறினார்.
