திண்டிவனம்: பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோருக்கு இடையே கடந்த ஒன்றரை வருடமாக கருத்து வேறுபாடு நிலவின. இதன் காரணமாக சட்டமன்றத் தேர்தலை பாமக இரு அணிகளாக சந்தித்தன. தலைவர் பதவியிலிருந்து அன்புமணியை நீக்கி கடுமையாக விமர்சித்த ராமதாஸ் தேர்தலுக்குபின் அமைதியானார். இதனிடையே கடந்த வாரம் ராமதாசின் திருமண நாளையொட்டி, தைலாபுரம் தோட்டத்திற்கு குடும்பத்துடன் வந்த அன்புமணி தனது பெற்றோரிடம் ஆசீர்வாதம் பெற்றார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி, ‘‘பாமகவில் நிலவிய அனைத்து பிரச்சினைகளும் விரைவில் முடிவுக்கு கொண்டு வரப்படும்” என்று தெரிவித்திருந்தார். இந்த சந்திப்புக்குபின் ராமதாஸ் பெயரில் எந்தவொரு அறிக்கையும் வெளியாகாமல் இருந்தது. இதனிடையே நேற்று ராமதாஸ், தனது கட்சி நிர்வாகியின் மறைவுக்கு இரங்கல் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் அவரது பெயருக்கு கீழ் ‘‘பாமக நிறுவனர்” என்ற குறிப்பே இடம்பெற்றிருந்தது.
அன்புமணியுடன் மோதல் நீடித்தபோது பாமக நிறுவனர்- தலைவர் என குறிப்பிடப்பட்டிருந்த நிலையில் தற்போது அதை நீக்கம் செய்து ராமதாஸ் கையெழுத்திட்டு அறிக்கை வெளியாகி இருப்பதன்மூலம் தந்தை, மகன் இடையிலான மோதல் முடிவுக்கு வந்துவிட்டது உறுதியாகி இருப்பதாக பாமகவினர் தெரிவிக்கின்றனர். இதன் எதிரொலியாக நீதிமன்றம், தேர்தல் கமிஷனில் போடப்பட்டுள்ள வழக்குகள் இருதரப்பிலும் வாபஸ் பெறப்பட்டு, விரைவில் ஒருங்கிணைந்த பாமக நிர்வாகிகளின் நியமனம் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகலாம் என அக்கட்சி வட்டாரத்தில் தகவல் கசிகிறது.
அதேவேளையில் ராமதாசுக்காகவும், அன்புமணிக்காகவும் குரல் கொடுத்து பலகட்ட போராட்டங்களில் பங்கேற்று, பல்வேறு வழக்குகளை சந்தித்த பாமக நிர்வாகிகள், தொண்டர்களில் பலர் வேதனையில் இருப்பதாகவும், தவெக உள்ளிட்ட மாற்றுக் கட்சிக்கு தாவும் மன நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
