பேரம்பாக்கத்தில் கூவம் ஆற்றில் தடுப்பணை பணி 75 சதவீதம் நிறைவு

 

திருவள்ளூர்: பேரம்பாக்கம் கூவம் ஆற்றின் குறுக்கே ரூ.5.98 கோடி மதிப்பில் நடந்து வரும் புதிய தடுப்பணை கட்டும் பணி 75 சதவீதம் நிறைவடைந்துள்ளது. கடம்பத்தூர் ஒன்றியம், பேரம்பாக்கம் அடுத்த கேசாவரம் அணைக்கட்டு பகுதியில் கூவம் ஆறு உருவாகிறது. இந்த கூவம் ஆறு பேரம்பாக்கம், சத்தரை, கடம்பத்தூர், மணவாள நகர், புடலூர், அரண்வாயல், ஜமீன் கொரட்டூர், சோரஞ்சேரி, பருத்திபட்டு வழியாக 72 கி.மீ. ஓடி, சென்னையில் நேப்பியர் பாலம் அருகே வங்கக் கடலில் கலக்கிறது. இந்த, கூவம் ஆற்றின் குறுக்கே புதுமாவிலங்கை, அதிகத்தூர், புட்லூர், அரண்வாயல், ஜமீன்கொரட்டூர், சோரஞ்சேரி, பருத்திபட்டு ஆகிய இடங்களில் ஏற்கனவே தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன.

பேரம்பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள விவசாயிகள் அதிகளவில் விவசாயத்தையே நம்பியுள்ளதால், பேரம்பாக்கம் பகுதியில் தடுப்பணை கட்டினால் நிலத்தடி நீர் உயர்ந்து, பேரம்பாக்கம் ஏரியில் நீர் சேமித்து வைத்து விவசாயம் பெருகும் என்றும், இதனால் விவசாயிகள் பயன் பெறுவார்கள் எனவும் பேரம்பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தொடர்ந்து, தமிழக அரசிடம் கோரிக்கை வைத்து வந்தனர். இக்கோரிக்கையின் அடிப்படையில், கடந்த பிப்ரவரி மாதம் பேரம்பாக்கம் அருகே கூவம் ஆற்றின் குறுக்கே ரூ.5.98 கோடி மதிப்பில் புதிய தடுப்பணை கட்ட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து, அதற்கான நிதியினையும் ஒதுக்கீடு செய்தது.

இதனைத்தொடர்ந்து, பேரம்பாக்கத்தில் கூவம் ஆற்றின் குறுக்கே 85 மீட்டர் நீளத்தில் 1.5 மீட்டர் உயரம் கொண்ட தடுப்பணையும், இருபுறமும் தலா 2 மதகுகளுடன் கதவணைகள் அமைக்கவும், கடந்த மார்ச் மாதம் புதிய தடுப்பணை கட்டும் பணி தொடங்கப்பட்டு, பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நீர்வளத்துறை செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில், உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார் மேற்பார்வையில், தடுப்பணை கட்டும் பணிகள் வேகமாக மேற்கொள்ளப்பட்டு, இதுவரை 75 சதவீதம் பணிகள் நிறைவடைந்துள்ளது.

இந்நிலையில், வடகிழக்கு பருவமழைக்குள் தடுப்பணை கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க உத்தேசிக்கப்பட்டு, நீர்வளத்துறையால் பணிகள் மிகவும் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்த, தடுப்பணை பயன்பாட்டுக்கு வரும்போது, பேரம்பாக்கம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து, சுமார் 590 ஏக்கர் விளை நிலங்கள் பயன்பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: