கூடுவாஞ்சேரி அருகே நந்திவரத்தில் பரபரப்பு; குரங்கு சரமாரி கடித்து குதறியதில் பெண்கள் உள்பட 8 பேர் படுகாயம்: 3 வயது குழந்தை சீரியஸ்; மருத்துவமனையில் சிகிச்சை

 

கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரி அருகே நந்திவரத்தில் குழந்தைகள் உட்பட 8 பேரை கடித்து குதறிய குரங்கால் நேற்று காலை பெரும் பரபரப்பு ஏற்பட்டது. குரங்கு கடியால் பாதிக்கப்பட்ட 3 வயது குழந்தைக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. செங்கல்பட்டு மாவட்டம், நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளன. இங்கு சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், நந்திவரம் துலுக்கானத்தம்மன் கோயில் தெருவில் உள்ள பொதுக்குழாயில் நேற்று காலை அப்பகுதியை சேர்ந்த பெண்கள் குடிநீர் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு சுற்றி திரிந்த குரங்கு ஒன்று தண்ணீர் பிடித்துக்கொண்டிருந்த பெண்களை திடீரென கடித்து குதற தொடங்கியது. இதனால் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்த பெண்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.

அந்த சமயத்தில் அங்குள்ள அங்கன்வாடி மையத்திற்கு தாய் ஒருவர் தனது 3 வயது ஆண் குழந்தையை அழைத்து சென்றார். அப்போது அந்த குரங்கு மூன்றரை வயது குழந்தையையும் கடித்தது. குழந்தையின் தாய் போராடியும் குரங்கு விடவில்லை. உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து குரங்கை விரட்டினர். ஆனால் அது தன்னை விரட்டியவர்களையும் விட்டு வைக்காமல் விரட்டி கடித்தது. குழந்தைகள், கர்ப்பிணிகள் உள்ளிட்ட 8 பேர் குரங்கு குடியால் பாதிக்கப்பட்டனர். துலுக்கானத்தம்மன் கோயில் தெருவை ஒட்டி 18 மற்றும் 19வது வார்டுகள் அமைந்துள்ளன. இந்த 2 வார்டுகளை சேர்ந்தவர்களும் குரங்கின் அட்டகாசத்தால் அச்சம் அடைந்துள்ளனர். குரங்கு கடியால் காயமடைந்த குழந்தைகள், பெண்கள் உட்பட அனைவரும் அருகில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர்.

இதில் அங்கன்வாடிக்கு சென்ற மூன்றரை வயது ஆண் குழந்தை குரங்கு கடியால் அதிக பாதிப்புக்கு உள்ளானதால் செங்கல்பட்டு அரசு பொது மருத்துமனையில் மேல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளது. அங்கு குழந்தைக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதற்கிடையே பொதுமக்களை குரங்கு துரத்தி துரத்தி கடித்தபோது அங்கிருந்தவர்கள் உடனே வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் காலை 10 மணிக்கு வனத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்களும் பல வழிகளில் போராடியும் குரங்கை பிடிக்க முடியவில்லை. பின்னர் 2 மணி நேரம் போராடி கூண்டு வைத்து குரங்கை பிடித்தனர். இதை தொடர்ந்து அந்த குரங்கு வண்டலூர் உயிரியல் பூங்காவில் விடப்பட்டது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் தாம்பரம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இச்சம்பவத்தால் நந்திவரம் பகுதியில் நேற்று காலை பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: