நியூயார்க்: அமெரிக்க அதிபர் டிரம்ப், கிரிப்டோ கரன்சி வணிகங்கள் மூலம் கடந்த 2025ம் ஆண்டில் மட்டும் சுமார் 1.4 பில்லியன் டாலர் (ஏறத்தாழ ₹11,900 கோடி) வருமானம் ஈட்டியுள்ளதாக அமெரிக்க அரசு நெறிமுறைகள் அலுவலகம் வெளியிட்ட 927 பக்க நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது சர்ச்சையான நிலையில், கத்தார் வழங்கிய புதிய ‘ஏர் ஃபோர்ஸ் ஒன்’ விமானத்தில் தனது முதல் பயணத்தை மேற்கொள்ள தயாராகி கொண்டிருந்தபோது நிருபர்களிடம் டிரம்ப் கூறுகையில், ‘நான் ஏன் லாபம் ஈட்டுகிறேன் என்று உங்களுக்கு தெரியும்; பங்குச்சந்தை ஏறுமுகத்தில் உள்ளது, எனவே அனைவரும் லாபம் சம்பாதிக்கிறார்கள். என்னிடம் அதிக பணமும் ரொக்கமும் இருப்பதால் எனக்கும் லாபம் கிடைக்கிறது என்றார்.மேலும், அதிபர் பதவியை பயன்படுத்தி லாபம் ஈட்டுவதாக கிளம்பியுள்ள விமர்சனம் குறித்து கேட்டபோது, ‘அதிபராவதற்கு முன்பே நான் தொழிலதிபராக பெரும் செல்வம் சேர்த்துவிட்டேன்.
தனது தனிப்பட்ட முதலீடுகளை, தான் நேரடியாக நிர்வகிப்பதில்லை. பெரிய நிதி நிறுவனங்களே, தனது பணத்தை முதலீடு செய்கின்றன. அந்த நிறுவனங்களின் அதிகாரிகளிடம், தான் பேசுவதே இல்லை. வெள்ளை மாளிகையில் தனது முதல் ஆண்டில் தொடங்கப்பட்ட கிரிப்டோ முயற்சிகளுடன் அந்த வருமானம் தொடர்புடையதாக இருந்தபோதிலும், தனது வருவாய் முந்தைய தொழில் வாழ்க்கையின் மூலமே கிடைத்தது.
அரசியல் அல்லது வணிகம் – இதில் எது எனக்கு சிறந்த பணிவாழ்வை அளித்தது என்று எனக்கு தெரியவில்லை; ஆனால் வணிகத்தில் நான் சிறப்பான ஒரு வாழ்க்கையை கொண்டிருந்தேன். பணப்புழக்கத்தையும் பல்வேறு விஷயங்களையும் நீங்கள் பார்த்திருப்பீர்கள்’ என்றார்.
