இஸ்லாமாபாத்: இந்தியாவும் பாகிஸ்தானும் தங்களிடம் உள்ள கைதிகளின் பட்டியல்களை பரிமாறிக்கொண்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியா -பாகிஸ்தான் இடையே 2008ம் ஆண்டு மே ஒன்றாம் தேதி கையெழுத்தான தூதரக அணுகல் ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் இருநாடுகளிடமும் இருக்கும் சிறைக்கைதிகளின் பட்டியல்களை பரிமாரிக்கொள்ள வேண்டும்.
இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் இரு நாடுகளும் தங்களிடம் இருக்கும் கைதிகளின் பட்டியல்களை பரிமாறிக்கொண்டுள்ளன. வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாகிஸ்தானில் உள்ள 52பொதுமக்கள், 198 மீனவர்கள் உட்பட 250 இந்திய கைதிகள் அடங்கிய பட்டியலை பாகிஸ்தான் அரசு இந்திய தூதகரத்தில் ஒப்படைத்துள்ளது.
அதே நேரத்தில் இந்திய சிறைகளில் உள்ள 439 பாகிஸ்தானிய அல்லது பாகிஸ்தானியர் என்று கருதப்படும் கைதிகள் அடங்கிய பட்டியலை இந்திய அரசு வழங்கி உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தண்டனை காலத்தை நிறைவு செய்த மற்றும் குடியுரிமை உறுதிப்படுத்தப்பட்ட 97 பாகிஸ்தானிய கைதிகளை விடுவித்து தாயகம் திரும்ப அனுமதிக்க வேண்டும் என்றும் இந்திய அரசிடம் வலியுறுத்தப்பட்டதாக வெளியுறவுத்துறை அமைச்சக அலுவலகம் தெரிவித்துள்ளது.
