சென்னை: அதிமுகவில் இருந்து துரோகிகள் வெளியேறுவதால், தொண்டர்கள் மகிழ்ச்சியாக உள்ளதாக எடப்பாடி பழனிசாமி மகளிர் அணி கூட்டத்தில் பேசியதுடன், இப்படி ஒரு ஆட்சியை நடத்த முதல்வர் விஜய்க்கு அருகதை உள்ளதா என்றும் கேள்வி எழுப்பினார். அதிமுக மகளிர் அணியின் செயல்பாடுகள் குறித்தும், கட்சி வளர்ச்சி பணிகளில் மகளிரின் பங்கு குறித்தும், கழக மகளிர் அணி மாநில நிர்வாகிகள்;
மாவட்ட மகளிர் அணி செயலாளர்கள், அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களை சேர்ந்த, மாவட்ட இணைச் செயலாளர், மாவட்ட துணைச்செயலாளர், தேர்ந்தெடுக்கப்பட்ட மகளிர் பொதுக்குழு உறுப்பினர்கள், மகளிர் கழக செய்தி தொடர்பாளர்கள் ஆலோசனை கூட்டம் சென்னை, ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நேற்று காலை 10 மணிக்கு நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டத்தில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று மகளிர் அணியினரிடம் அரசியல் களப்பணிகள் மற்றும் கட்சியின் உட்கட்டமைப்பை வலுப்படுத்துவது குறித்து விவாதித்தார். மேலும் மகளிர் அணியின் செயல்பாடுகளை தீவிரப்படுத்துவது, மக்கள் சந்திப்பு பணிகளை அதிகரிப்பது மற்றும் பெண்களுக்கான திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பது குறித்து எடப்பாடி விரிவான ஆலோசனைகளை வழங்கினார்.
மகளிர் அணியினரின் தீவிர பங்களிப்பு கட்சியின் வெற்றிக்கு எவ்வளவு முக்கியமானது என்பதை அவர் வலியுறுத்தினார். கூட்டத்தில் மூத்த தலைமை கழக நிர்வாகிகள் கே.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், வளர்மதி, கோகுல இந்திரா உள்ளிட்டவர்கள் பங்கேற்று பேசினர். குறிப்பாக, மகளிர் அணியினர் யாரும் அதிமுகவில் இருந்து விலகி தவெகவுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுரை வழங்கப்பட்டது.
அதேநேரம், இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்களும் தற்போது கட்சியில் துணை பொதுச்செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்ட எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் பங்கேற்காமல் புறக்கணித்தனர். இவர்கள், எடப்பாடி பழனிசாமியுடன் இன்னும் அதிருப்தியில் உள்ள காரணத்தினால் தான் மகளிர் அணி கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்று கூறப்பட்டது.
அதிமுக மகளிரணி நிர்வாகிகள் உடனான ஆலோசனை கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: அதிமுகவில் இருந்து துரோகிகள் வெளியேறுவதால் தொண்டர்கள் மகிழ்ச்சியோடும், எழுச்சியோடும் இருக்கின்றனர். அரை நூற்றாண்டு கண்ட அதிமுகவை அழித்துவிடலாம் என நினைத்தால் அது முடியாது. மக்கள் அதிமுகவிற்கு தான் வாக்களித்து ஒவ்வொருவரையும் எம்எல்ஏவாக ஆக்கினார்கள். இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்றவர்களை ராஜினாமா செய்ய வைத்து சிலர் தங்கள் கட்சியில் இணைக்கிறார்கள்.
இப்படி ஒரு ஆட்சியை நடத்த முதல்வர் விஜய்க்கு அருகதை உள்ளதா என்று பேசினார். கூட்டத்தில் பங்கேற்ற மகளிர் அணியினரும், அதிமுக கட்சி வளாகத்தில் நிருபர்களிடம் கூறும்போது, ‘‘இன்னும் 6 மாதத்தில் பாருங்கள். கட்சியை விட்டு போனவங்க எல்லாம் திரும்பி வந்து எடப்பாடி பழனிசாமி காலில் விழுந்து, தங்களை கட்சியில் சேர்த்துக் கொள்வார்கள் என்று கெஞ்சும் நிலை உருவாகும்’’ என்று ஆவேசமாக கூறினர்.
