புதிய ஊரக வேலை திட்டத்தால் ரூ.5 ஆயிரம் கோடி கூடுதல் சுமை ஏறியபின் தாமதமாக பிரதமருக்கு விஜய் கடிதம்

சென்னை: புதிய ஊரக வேலை திட்டத்தால் மாநில அரசுக்கு ரூ.5 ஆயிரம் கோடிக்கும் மேல் கூடுதல் சுமை ஏற்படும் என்றும் ‘மகாத்மா காந்தி’ பெயரிலேயே ஊரக வேலை திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் விஜய் நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:

‘விக்சித் பாரத்-ரோஜ்கார் மற்றும் ஆஜீவிகா மிஷன் (கிராமிண்) திட்டத்தின் செயலாக்கம் 1.7.2026 (நேற்று) முதல் தொடங்கியுள்ள புதிய திட்டத்தின் நிதிப்பகிர்வு முறை மற்றும் செயல்பாட்டுக் கட்டுப்பாடுகள், மாநில அரசுக்கு 5,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக கூடுதல் நிதிச் சுமையையும், செயல்பாட்டு ரீதியான தாக்கங்களையும் ஏற்படுத்தும். ‘VBGRAMG சட்டம், 2025’-ன் சில விதிகளில் முக்கிய மாற்றங்களும் தளர்வுகளும் அவசியமாகிறது.

அவ்வாறு செய்யாவிடில், இத்திட்டத்தை கள அளவில் தடையின்றியும் திறம்படவும் செயல்படுத்துவது பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதுடன் கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தை சார்ந்துள்ள கிராமப்புற மக்களையும் இது கடுமையாக பாதிக்கும். நிதிப்பகிர்வு முறையை பொறுத்தவரை, தற்போதைய வழிகாட்டுதல்களின்படி ஊதியம், கட்டுமான பொருட்கள் மற்றும் நிர்வாக செலவுகள் ஆகிய அனைத்திற்கும் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே 60:40 என்ற வீதத்தை கட்டாயமாக்குகின்றன.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் கடந்த இரண்டு தசாப்தங்களாக வேறுபட்ட ஒரு கட்டமைப்பின் கீழ் செயல்பட்டு வந்த நிலையில், இந்த திடீர் மாற்றம் மாநில கருவூலத்திற்கு பெரும் நிதிச் சுமையை ஏற்படுத்தும். அதன் காரணமாக ஊதியம் மற்றும் வேலைநாட்கள் குறைய வாய்ப்புள்ளதுடன் பிற அத்தியாவசிய நலத்திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறையக்கூடும். எனவே, ஊதிய மற்றும் நிர்வாக செலவுகளை பொறுத்தவரையில் ஒன்றிய அரசின் 100% நிதியுதவியை தொடரவேண்டும்.

கட்டுமான பொருட்கள் கூறுகளை ஒன்றிய அரசுக்கும் தமிழ்நாடு அரசுக்கும் இடையே 75:25 என்ற வீதத்தில் பகிர்ந்துகொள்ள வேண்டும். மாநிலங்களுக்கான நிதிப் பகிர்வுக்கென தனிப்பட்ட வழிமுறையை உருவாக்க மாநில அரசுகளுக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும். முக்கிய வேளாண் பருவங்களை அறிவிப்பதிலும், கள அளவில் கூடுதல் நெகிழ்வுத்தன்மை தேவைப்படுவதால் இச்சட்டம், ஒவ்வொரு நிதியாண்டிலும் முதன்மை விதைப்பு மற்றும் அறுவடை காலங்களை உள்ளடக்கிய 60 நாட்களை மாநில அரசு நிலையானதாக அறிவிக்க வேண்டும்.

அந்த காலகட்டத்தில் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட வேண்டும் என கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ‘எல் நினோ’ போன்ற கணிக்க இயலாத காலநிலை மாற்றங்கள், விவசாய கால அட்டவணையை அடிக்கடி மாற்றும் தன்மையுடையதாய் உள்ளதால், எதிர்பாராத காலங்களில் தொழிலாளர் தேவையை ஏற்படுத்துவதுடன் முன்பே அறிவிக்கப்பட்ட முதன்மைப் பருவங்களின்போது வாழ்வாதாரத்திற்கான வேலைவாய்ப்பின் அவசியத்தை ஏற்படுத்தும் என்பதால், கால அட்டவணையை முன்னரே அறிவிப்பதற்கு பதிலாக, உள்ளூர் நிலைமைகளுக்கு ஏற்ப இந்த 60 நாட்கள் முதன்மை பருவத்தை அந்தந்த மாவட்ட ஆட்சியர்களே மாற்றி அறிவிப்பதற்கான அதிகாரத்தை பரவலாக்க வேண்டும்.

அனைவருக்கும் வீடு’ என்பதை தமிழ்நாடு அரசு ஒரு முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளதால், VB-GRAMG கட்டமைப்பின் கீழ் மாநில வீட்டுவசதித் திட்டங்களையும் சேர்த்து, இந்நலத்திட்ட இலக்குகளை கணிசமாக விரைவுபடுத்தி, அனைவருக்கும் வீடு கிடைப்பதை உறுதி செய்ய உதவிட வேண்டும். திட்டங்களை ஒருங்கிணைக்கும் அறிவிப்பு மற்றும் ஒப்புதல் அளிக்கும் அதிகாரத்தை மாநில அரசுகளுக்கே வழங்குவது, மிகவும் பயனுள்ளதாகவும் திட்டச் செயலாக்கத்தை உறுதி செய்யவும் ஏதுவாக அமையும்.

மகாத்மா காந்தி மாண்பை போற்றும் வகையிலும், இத்திட்டத்தின் மீது பொதுமக்கள் கொண்டுள்ள நன்மதிப்பை மேலும் உயர்த்தும் வகையிலும் இத்திட்டத்தை மகாத்மா காந்தி பெயரிலேயே தொடர்ந்து செயல்படுத்த வேண்டும். இந்த முன்மொழிவுகளை பிரதமர் கனிவுடன் பரிசீலிக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.

Related Stories: