சென்னை: சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் விஜய்யை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம், பாலகிருஷ்ணன் ஆகியோர் சந்தித்தனர். பின்னர் கூட்டாக நிருபர்களிடம் கூறியதாவது: ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள தொழிலாளர் தொகுப்புச் சட்டங்கள் தொழிலாளர் நலனுக்கு எதிரானவை என்பதால், அவற்றை அப்படியே அமல்படுத்தக் கூடாது.
நீதிபதி கோபால் கவ்டே தலைமையிலான குழுவின் பரிந்துரைகளைப் பெற்று, தொழிற்சங்கத் தலைவர்களுடன் கலந்தாலோசித்துச் சட்ட விதிகளை உருவாக்க வேண்டும். பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்க உருவாக்கப்பட்டுள்ள சிங்கப்பெண் அதிரடிப்படைக்குத் தகுந்த பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.
காவிரி விவகாரத்தில் தமிழக வரலாற்றில் முதன்முறையாகப் பல்வேறு மாறுபட்ட கருத்துக்கள் நிலவும் சூழல் ஏற்பட்டுள்ளது நல்லது அல்ல என்று குறிப்பிட்ட தலைவர்கள், மேகதாது அணை சம்பந்தமாகப் புதிய நடுவண் அமைப்பதற்கான சட்டமன்றத் தீர்மானம் குறித்து அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி ஒருமித்த கருத்தை உருவாக்க வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கு மாற்றாக ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள வி.பி.ஜி.ராம் திட்டம் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது.
இதில் மாநில அரசு 40 சதவீத நிதியை ஒதுக்க வேண்டியுள்ளதால், நிதி ஒதுக்கீடு குறித்து பட்ஜெட்டில் உரிய அறிவிப்புகள் வர வேண்டும். இளைஞர்களின் வேலைவாய்ப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும். மத்திய அரசின் திட்டங்கள் கார்ப்பரேட் நிறுவனங்களின் நலனுக்கானதாக இருப்பதால், தமிழக அரசு மாநில உரிமை, தொழிலாளர் நலன் மற்றும் மதச்சார்பின்மை ஆகியவற்றில் உறுதியாக நிற்க வேண்டும்.
கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆட்சியில் அங்கம் வகிக்கவில்லை. வெளியில் இருந்து ஜனநாயகத்திற்காகவும் மக்கள் அதிகாரத்தைப் பாதுகாக்கவும் தொடர்ந்து அரசுக்கு ஆதரவளிப்போம். நாங்களும் கூட்டணி அமைப்போம். தவெக ஆட்சி கவிழ்ந்து விடும் என்பதெல்லாம் ஏற்புடையதுதல்ல அதற்கான சூழல் தற்போது இல்லை. இவ்வாறு கூறினர்.
