வைகோவுடன் சேர்ந்து முதல்வர் விஜய் குதிரை பேரம்: வீடியோ ஆதாரத்துடன் ஆளுநருக்கு திமுக பரபரப்பு புகார்

சென்னை: திமுக கூட்டணியில் இருந்து மதிமுக வெளியேறியது. திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மதிமுக எம்எல்ஏக்களை ராஜினாமா செய்ய வைத்து தவெக துணையோடு தேர்தலில் போட்டியிட வைக்க மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திட்டமிட்டார். இது தொடர்பாக மதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய வைகோ, ‘‘முதல்வர் விஜய்யை சந்தித்து பேசியிருந்தேன்.

அப்போது மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய வைத்து மீண்டும் தேர்தலில் போட்டியிட வைத்தால், அந்த 2 பேரையும் வெற்றி பெற வைக்க வேண்டியது எனது பொறுப்பு என விஜய் என்னிடம் உத்தரவாதம் அளித்தார். நீங்கள் எங்கே கூறுகிறீர்களோ அங்கு வந்து பிரசாரம் செய்யவும் தயார், என முதல்வர் விஜய் கூறினார்’’ என்று வைகோ தெரிவித்திருந்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

வைகோவின் இந்த கருத்தை வைத்து முதல்வர் விஜய் குதிரை பேரத்தில் ஈடுபட்டதை வைகோவை ஒத்துக்கொண்டுள்ளார் என திமுக குற்றம்சாட்டியது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேசிய வீடியோ காட்சிகளையும் அதனுடன் சேர்த்து கடிதமாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தமிழக ஆளுநர் அர்லேகர் மற்றும் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு துறைக்கு கடிதம் எழுதியுள்ளார். மொத்தம் 7 பக்கத்திற்கு அந்த கடிதமானது அனுப்பப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பட்டினப்பாக்கத்தில் உள்ள முதல்வர் விஜய்யின் வீட்டில் நான் சந்தித்தபோது மதிமுக எம்எல்ஏக்கள் 2 பேரை தவெகவுக்கு ஆதரவு தருவதற்காக அவர்களை ராஜினாமா செய்ய சொல்ல வேண்டும். அந்த தொகுதிகளில் அவர்களை நான் வெற்றி பெற வைப்பேன் என்று விஜய் தன்னிடம் கூறியதாக பேசியுள்ளார். மதிமுகவை சேர்ந்த ராஜேந்திரன் கடையநல்லூர் தொகுதியிலும், செந்தில் செல்வன் சீர்காழி தொகுதியிலும் திமுக சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.

இவர்கள் இருவரையும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்ததாக பொது வெளியில் பேசியுள்ளார். எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவதில் வைகோவுக்கும்- விஜய்க்கும் இடையே குதிரை பேரம் நடந்துள்ளது பட்டவர்த்தமாக வெளியே தெரிந்துவிட்டது. இது குறித்து போலீசார் முழு அளவில் விசாரணை நடத்த வேண்டும். வைகோவின் இந்த ஒப்புதல் வாக்குமூலம் பெரும்பாலான சமூக வலைத்தளங்களிலும், தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பாகியுள்ளது.

பொது மக்கள் பிரதிநிதிகளை தேர்வு செய்வதற்காக மக்கள் பணத்தை தேர்தல் ஆணையம் செலவு செய்து தேர்தலை நடத்துகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மக்கள் பிரதிநிதி தேர்தல் முடிந்த சில வாரங்களுக்குள் வேறு ஒரு கட்சி தலைவரின் விருப்பத்திற்காக தனது பதவியை ராஜினாமா செய்வதை ஏற்க முடியாது. அரசியல் உள்நோக்கத்திற்காக பேரம் பேசும் வகையில் ஒரு எம்எல்ஏவை சட்டத்திற்கு முரணாக ராஜினாமா செய்யச் சொல்வது மக்கள் பிரதிநிதித்துவ ஜனநாயகத்தின் அடிப்படை கட்டமைப்பையே சாய்த்துவிடும்.

அரசியலமைப்பின் 10வது அட்டவணையில் கூறப்பட்டுள்ள கட்சி தாவல் தடை மற்றும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்திற்கு எதிராக இதுபோன்ற மரபு மீறி செயல்பட்டிருப்பது கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது. அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக ராஜினாமா செய்யும் எம்எல்ஏ மீண்டும் தேர்ந்தெடுக்கப்படும் வகையில் இந்த குதிரை பேரம் நடந்துள்ளது.

பணத்திற்காகவோ அல்லதும் வேறு சாதகமான செயலுக்காகவோ, அரசிடமிருந்து வேறு சலுகைகளை பெறுவதற்காகவோ, சட்டவிரோத பயன் பெறுவதற்காகவோ இதுபோன்ற குதிரை பேரத்தில் ஈடுபடுவது விசாரணைக்கு உட்பட்டதாகும். முழுக்க முழுக்க குற்றவியல் விசாரணைக்கும் உட்பட்டதாகும். தமிழகத்தில் சமீபக காலமாக நடந்துவரும் அரசியலில் பெரும்பான்மை இல்லாத ஆளும் கட்சி தனது பெரும்பான்மைக்காக மற்ற கட்சி எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்வது நடந்து வருகிறது.

அதன் தொடர்ச்சியாகத் தான் முதல்வர் விஜய், திமுக எம்எல்ஏக்கள் 2 பேரை தங்கள் வசம் இழுக்க வைகோவுடன் சேர்ந்து குதிரை பேரம் நடத்தியுள்ளார். எனவே, இந்த குதிரை பேரம் மற்றும் ஊழல் செயல்பாடுகளை ஆளும் கட்சியும், முதல்வர் விஜய்யும் நடத்துவது அரசியல் நியதிக்கு எதிரானது. குதிரை பேரம் என்பது குற்றவியல் சட்டத்தில் குற்றம் இல்லை என்று கூறப்பட்டாலும், அரசியல் லாபத்திற்காக சட்டவிரோதமாக கட்டாயப்படுத்துதல் குற்றமாகும்.

தனது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை அரசியல் சலுகைகளுக்காக சட்டவிரோதமாக விலைக்கு வாங்குவது ஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும். எனவே, வைகோ மற்றும் முதல்வர் விஜய்க்கு இடையிலான குதிரை பேரம் குறித்து லஞ்ச ஒழிப்பு துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து உரிய விசாரணை நடத்துமாறு உத்தரவிட வேண்டும். உச்ச நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையில் எப்ஐஆர் பதிவு செய்து சட்டப்படி உரிய விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.

Related Stories: