ஆயிரம் ஏக்கர் நிலங்களுக்கு பாசனத்துக்கு உதவியது பின்னலூரில் 50 ஆண்டுகளாக தூர்வாராமல் கிடக்கும் சித்தேரி

*கண்டுகொள்ளாத அதிகாரிகள்

சேத்தியாத்தோப்பு : பின்னலூரில் 50 ஆண்டுகளாக தூர்வாராமல் உள்ள சித்தேரியை தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.சேத்தியாத்தோப்பு அருகே பின்னலூர் கிராமத்தில் சித்தேரி எனும் ஏரி அமைந்துள்ளது.

இந்த ஏரி கிராமத்தின் நீர் தேவைக்கும் மற்றும் சுற்றுப்புறத்தில் உள்ள ஆயிரத்திற்கு மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்களுக்கு பாசனத்திற்கு தண்ணீர் தந்து வரும் ஏரியாக இருந்து வருகிறது.

இவ்வாறான நிலையில் இந்த ஏரியானது கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக தூர்வாராத நிலையில் தற்போது ஏரியானது முட்புதர்கள் சூழ்ந்து ஏரி என்று சொல்வதற்கான அடையாளமே இல்லாமல் இருப்பதாக கிராம மக்கள், விவசாயிகளும் தெரிவித்து வருகின்றனர்.

இந்த ஏரிக்கு வடிகால் வசதி இருந்தும் பராமரிக்காததின் காரணமாக ஏரியின் வடிகால் வாய்க்கால் தூர்ந்து போய்விட்டதாகவும், தற்போது ஏரிக்குள்ளே தண்ணீர் சேர்ந்தால் அது குட்டையாக தேங்கி இருக்கிறது எனவும் குறிப்பிடுகின்றனர்.

மேலும் பருவ மழை காலங்களில் ஏரியில் தண்ணீர் தேங்கினால் அதில் மேற்கு பகுதி வயல்வெளியில் சூழ்ந்து கடுமையான பாதிப்பு ஏற்படுத்தும்படியாக இருக்கிறது என குறிப்பிடுகின்றனர்.

அதனால் ஏரியை முறையாக தூர்வாரி பராமரிக்க வரவேண்டும் என தொடர்ந்து பல ஆண்டுகளாக போராடிவரும் கிராம மக்கள், விவசாயிகள் இதுகுறித்து அதிகாரிகள் கண்டுகொள்வதே இல்லை என குறிப்பிடுகின்றனர்.

விருத்தாசலம் பொதுப்பணித்துறை அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் வருவதால் அதிகாரிகள் ஏரியை பராமரிக்காமல் விட்டுவிட்டனர் என விவசாயிகள் குறிப்பிடுகின்றனர். மேலும் இதுகுறித்து வருவாய் துறையிடம் தெரிவித்தாலும் அவர்களும் என்னவென்றுகூட கேட்பதில்லை என வேதனையோடு குறிப்பிடுகின்றனர்.

தற்போது பல இடங்களிலும் விவசாயத்திற்கு வண்டல் மண் எடுக்க அனுமதிப்பதுபோல அந்த வகையிலாவது இந்த ஏரியை விவசாயிகளே தூர்வார அனுமதிக்க வேண்டும். அல்லது அதிகாரிகளாவது போதுமான நிதியை ஒதுக்கி தூர்வார வேண்டும் என விவசாயிகளும், கிராம மக்களும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Related Stories: