*தொழிலாளர்கள் அவதி
மஞ்சூர் : நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ள மெரிலேண்டு,மைனலாமட்டம், கிட்டட்டிமட்டம், தேனாடு, சாம்ராஜ் எஸ்டேட் மற்றும் ராக்லேண்டு உள்ளிட்ட பகுதிகளை சுற்றிலும் பெருமளவு தேயிலை தோட்டங்கள் உள்ளன.
தேயிலை தோட்டங்களை ஒட்டி குடியிருப்புகளும் அமைந்துள்ளன. சமீப காலமாக இந்த பகுதிகளில் காட்டுமாடுகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. அவை பகல் நேரங்களில் தேயிலை தோட்டங்களில் கூட்டமாக மேய்ச்சலில் ஈடுபடுகின்றன.
இதனால் தேயிலை தோட்டங்களுக்கு இலை பறிக்க செல்லும் தொழிலாளர்கள் கடும் அவதிகுள்ளாகி வருகின்றனர். தேயிலை பறிப்பில் தீவிரமாக ஈடுபட்டு கொண்டிருக்கும்போது திடீரென தோட்டத்திற்குள் நுழையும் காட்டு மாடுகளை கண்டு அச்சமடையும் தொழிலாளர்கள் உடனடியாக தேயிலை பறிப்பதை கைவிட்டு தோட்டங்களில் இருந்து வெளியேறி வருவது வாடிக்கையாக உள்ளது.
நேற்று காலை மெரிலேண்டு பகுதியில் காட்டு மாடுகள் தேயிலை தோட்டத்திற்குள் புகுந்தன. இதை கண்ட பெண்கள் பீதியடைந்து தோட்டத்தில் இருந்து வெளியேறினர். நீண்ட நேரமாகியும் காட்டு மாடுகள் அங்கிருந்து செல்லாததால் தொழிலாளர்கள் பாதியிலேயே வீடு திரும்பினர்.
அடிக்கடி இது போன்ற சம்பவங்கள் நடைபெறுவதாக கூறிய தொழிலாளர்கள் காட்டு மாடுகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
பெங்கால்மட்டம் சுற்றுப்புற விவசாயிகள் உருளைகிழங்கு, கேரட், பீட்ரூட், பட்டாணி, அவரை, பீன்ஸ், முட்டைக்கோஸ் உள்ளிட்ட பல வகையான மலைகாய்கறிகளை பயிரிட்டு விவசாயத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் காட்டு மாடுகள் கூட்டம், கூட்டமாக தோட்டங்களில் புகுந்து பயிர்களை சூறையாடுவதுடன் தோட்டங்களையும் கால்களால் மிதித்து நாசம் செய்து வருகின்றன. இவைகளின் தொல்லையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் பலரும் மலைகாய்கறிகள் பயிரிடுவதை அறவே கைவிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
