தொடர் கதையாகி வரும் பிரச்சினை ஆலங்காடு ரயில்வே சுரங்கப்பாதையில் மாதக்கணக்கில் தேங்கி கிடக்கும் மழைநீர்

*பொதுமக்கள் சிரமம்

முத்துப்பேட்டை : திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த ஆலங்காடு வல்லம்பகாடு கிராமத்தில் திருவாரூர் – காரைக்குடி செல்லும் ரயில்வே தண்டவாளத்தின் சுரங்க பாதை ஒன்று அமைந்துள்ளது. இந்த சுரங்க பாதை கீழ்புறத்தில் மக்கள் மற்றும் வாகனங்கள் செல்லும் பாதை கிழக்கு கடற்கரை சாலையில் பிரிந்து திருத்துறைப்பூண்டி முத்துப்பேட்டை சாலையில் உள்ள அண்ணாசிலை அருகே சேருகிறது.

இவ்வழியாக தான் முத்துப்பேட்டைக்கு சுற்று பகுதியை சேர்ந்த கிராம மக்கள் வந்து செல்வார்கள். ஈசிஆர் சாலை வழியாக குறுக்கே முத்துப்பேட்டை டவுனுக்கு வருபவர் இந்த சாலையை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர்.இந்தநிலையில் ஒவ்வொரு முறையும் மழை பெய்யும்போது இந்த சுரங்க பாதையில் மழைநீர் அதிக அளவில் தேங்கி விடுகிறது.

மழைநீர் தேங்கி விடுவதால், சுரங்கப்பாதை வழியாக போக முடியாமல் வாகன ஓட்டிகள் திகைத்து நிற்கிறார்கள். இதனால் பலர் பல கிலோமீட்டர் தூரம் சுற்றி சென்று வரும் நிலை ஏற்பட்டு வருகிறது. இதில் தேங்கும் மழைநீர் வடியவும் அதனைக் அகற்றவும் மாதக்கணக்கில் ஆகிவிடுகிறது. அதுவரை மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

மழைநீரை உடனுக்குடன் அகற்றப்படும் வண்ணம் சுரங்கப்பாலத்தில் மின்மோட்டார் பொருத்தப்பட்டு, அதனை இயக்குவதற்கு ஒரு பணியாளரும் நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால் அந்த பணியாளரோ, மின்மோட்டாரை இயக்கி, தண்ணீரை அகற்றுவதே கிடையாது. இது குறித்து பொதுமக்கள் சென்று கேட்டால்,சம்பளம் வருவதில்லை. அதனால் நான் இயக்குவது இல்லை என்ற பதில் பொதுமக்களுக்கு கிடைத்திருக்கிறது.

இந்தநிலையில் சென்ற மாதம் இப்பகுதியில் பெய்த மழை நீரானது பல நாட்கள் கடந்தும் சுரங்கபாதையில் சுமார் 3 அடி அளவிற்கு தேங்கி கிடக்கிறது. தற்பொழுது அந்த மழைநீர், சேறும் சகதியுமாக மாறி நடந்து கூட செல்ல முடியாத நிலையில் உள்ளது. பல நாட்களாக மழைநீர் தேங்கி கிடப்பதால், கொசுக்கள் உற்பத்தி செய்யும் இடமாக சுரங்கப்பாதை மாறி விட்டது. பல நாட்களாக அசுத்தம் அடைந்து வருவதால், துர்நாற்றம் வீசி தொற்றுநோய் பரப்பும் அபாயத்திலும் உள்ளது.

மேலும் இதில் நடந்து செல்ல முடியாத மக்கள் மேல்புறம் உள்ள ரயில் தண்டவாளத்தை தாண்டி வருவதால் உயிர் பலிகள் மற்றும் பாதிப்பு ஏற்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இங்கு மழைநீர் தேங்கி கிடந்ததால் மீனவர் ஒருவர் நள்ளிரவு ரயில் தண்டவாளத்தை குறுக்கே கடந்து சென்றபோது அவ்வழியே சென்ற ரயில் மோதி உயிரிழந்தார்.

ஆகவே இப்பகுதி மக்கள் நலன் கருதி ரயில்வே துறை மற்றும் அதன் நிர்வாகம் துரித நடவடிக்கை எடுத்து இங்கு தேங்கியுள்ள இந்த சேறும் சகதியுமான மழைநீரை வெளியேற்றி போக்குவரத்திற்காக சரி செய்யவேண்டும் மேலும் இதுபோன்று இல்லாமல் உடனுக்குடன் நீரை வெளியேற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து அதே பகுதியை சேர்ந்தவர்கள் கூறுகையில்: இப்பகுதியில் உள்ள இரயில்வே சுரங்கபாதையில் மழை நீர் ஒரு மாதத்திற்கு மேலாக வெளியேற்றாமல் உள்ளதால் பொதுமக்கள் போக்குவரத்துக்கு மிகுந்த பாதிக்கப்பட்டுள்ளனர். ரயில்வே நிர்வாகம் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Related Stories: