சேத்தியாத்தோப்பு பகுதியில் நிலையான விலை இல்லாததால் குறைந்து வரும் பன்னீர் கரும்பு சாகுபடி

*விவசாயிகள் வேதனை

சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு அருகே வெள்ளியக்குடி மற்றும் சுற்றுப்புறங்களில் உள்ள பல்வேறு கிராமங்களில் பன்னீர் கரும்பு சாகுபடியானது கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக பாரம்பரியமாக 1000 ஏக்கருக்கு மேல் பயிரிட்டு வந்தனர்.

அப்போதைய சூழ்நிலையில் நல்ல லாபம் தந்த கரும்பு பயிரானது தற்போது நிலையான விலை இல்லாமல் போனதாலும், பயிர் செய்வதற்கான செலவினங்கள், கூலி ஆட்கள் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு விஷயங்களாலும் சாகுபடி பரப்பளவு முற்றிலும் குறைந்துள்ளது.

தற்போது சுமார் 300 ஏக்கருக்கு குறைவாகவே இப்பகுதிகளில் கரும்பு பயிரிட்டு வருகின்றனர். அதிலும் பல விவசாயிகள் பன்னீர் கரும்பு சாகுபடியை கைவிட்டு மாற்று பயிரான நெல் உள்ளிட்ட பயிருக்கு மாறிவிட்டனர். இந்த பகுதி பன்னீர் கரும்பு வீராணம் ஏரி கரை பகுதியோர விளைகின்ற தன்மையால் அதிக சுவையும், நன்றாக கருமை நிறமாக கொண்டதாகவும் இருக்கும் என குறிப்பிடுகின்றனர்.

இப்பகுதிகளில் கரும்பு சாகுபடி செய்து விவசாயிகள் ஆரம்பகட்ட பயிர் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். களை எடுப்பது, உரமிடுவது உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வரும் விவசாயிகள் இதற்கு நிலையான விலை இல்லை, வேளாண்மை துறை தங்களை கண்டு கொள்வதில்லை என குறிப்பிடுகின்றனர்.

முக்கியமாக இதன் அறுவடை காலமான பொங்கல் பண்டிகையின்போது சரியான விலை கிடைக்காமல் போகிறது. மேலும் பொங்கல் தொகுப்புக்காக கொள்முதல் செய்யும்போது அதிகாரிகளுக்கு இடையில் இடைத்தரகர்கள் புகுந்து கரும்பு பயிரிட்டுள்ள விவசாயிகளின் உழைப்பை சுரண்டுகிறார்கள் என தெரிவிக்கின்றனர்.

இயற்கை இடர்பாடுகளான பருவ மழை மற்றும் காற்று காரணமாக பயிர் சேதம் அடையும். அதற்கான பயிர் பாதுகாப்பு மற்றும் நிவாரணமோ இதுவரை கிடைத்தபாடில்லை என குறிப்பிடுகின்றனர். எனவே வருகின்ற பொங்கல் பண்டிகைக்கு கரும்பு கொள்முதல் செய்யும்போது கரும்பு ஒன்று 75 ரூபாய் என விலை கிடைக்க வேண்டும்.

இதற்காக தனியாக பயிர் பாதுகாப்பு, நிவாரணம் வழங்குவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பாரம்பரிய விவசாயிகளை கண்டறிந்து இந்த கரும்பு பயிரிடும் பரப்பளவை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: