3 நாட்கள் தொடர் விடுமுறை; கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள் – கடும் போக்குவரத்து நெரிசல்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். இன்று வெள்ளிக்கிழமை மொஹரம் பண்டிகை விடுமுறை என்பதாலும், நாளை மற்றும் நாளை மறுநாள் வார இறுதிநாட்கள் என்பதாலும், கொடைக்கானலை நோக்கி ஏராளமான சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருகின்றனர்.

ஏராளமான வாகனங்களில் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளதால் நகரின் பல பகுதிகளில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 3 நாட்கள் தொடர் விடுமுறையை கழிக்க கொடைக்கானலில் குவிந்து வரும் சுற்றுலா பயணிகளால் உள்ளூர் மக்களின் இயல்பான போக்குவரத்து கணிசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

அதே போல் போக்குவரத்து பாதிப்பால் கொடைக்கானலின் முக்கிய டூரிஸ்ட் பகுதிகளுக்கு செல்ல முடியாமல் சுற்றுலாப்பயணிகளும் தவித்து வரும் சூழல் நிலவுகிறது. வெள்ளி நீர்வீழ்ச்சி (Silver Cascade) முதல் மலைச்சாலையின் முக்கிய பகுதிகள் வரையில் சுமார் 2 முதல் 3 கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. குறிப்பாக மூஞ்சிக்கல், நாயுடுபுரம், ஏரிச்சாலை, உகார்த்தை நகர் மற்றும் செண்பகனூர் போன்ற பகுதிகளில் கடுமையான நெரிசல் காணப்படுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பல மணி நேரம் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிப்பதால், பலர் முழுமையாக சுற்றுலாத் தலங்களைச் சுற்றிப் பார்க்க முடியாமல் பாதியிலேயே திரும்புவதாகவும் கூறப்படுகிறது.

Related Stories: