கத்தார் ஆலை விபத்தில் பலியான 3 பேரின் உடல்கள் சொந்த ஊரில் அடக்கம்: சோகத்தில் மூழ்கிய கிராமங்கள்

நெல்லை: கத்தார் தொழிற்சாலை தீ விபத்தில் உயிரிழந்த நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த 3 வாலிபர்களின் உடல்கள் சொந்த ஊர்களுக்கு கொண்டுவரப்பட்டு, அரசு அதிகாரிகள் அஞ்சலியுடன் கண்ணீர் மல்க அடக்கம் செய்யப்பட்டன.

வளைகுடா நாடான கத்தாரில் உள்ள பர்சான் எரிவாயு ஆலையில் கடந்த 21ம் தேதி இரவு ஏற்பட்ட கோர தீ விபத்தில் 13 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகாவை சேர்ந்த பவித் (26), சஜித்குமார் (24), சுபின் (25) ஆகிய 3 வாலிபர்கள் சிக்கி பலியாகினர். உயிரிழந்த வாலிபர்களின் உடல்களை சொந்த ஊருக்கு கொண்டுவர இந்திய தூதரகம் எடுத்த நடவடிக்கையை தொடர்ந்து இன்று (வெள்ளிக்கிழமை) அவர்களது உடல்கள் சொந்த ஊர்களுக்கு வந்தடைந்தன.

ராதாபுரம் தாலுகாவில் உள்ள அவர்களது இல்லங்களுக்கு உடல்கள் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்கு அரசு தரப்பில் அதிகாரிகள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். பணகுடி அழகிய நம்பிபுரத்தைச் சேர்ந்த சுபின் (25) வீட்டிற்கு துணை தாசில்தார் குமார் நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்தினார். இதேபோல் சிவகாமிபுரத்தைச் சேர்ந்த சஜித்குமார் (24) வீட்டிற்கு ராதாபுரம் தாசில்தார் வில்லுடையார், பழவூரைச் சேர்ந்த பவித் (26) வீட்டிற்கு தாசில்தார் சுப்புலட்சுமி ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி, இறுதிச் சடங்குகளில் பங்கேற்றனர்.

வாலிபர்களின் உடல்கள் சொந்த கிராமங்களுக்கு கொண்டு வரப்பட்டதால் அப்பகுதியே பெரும் சோகத்தில் மூழ்கியது. உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். இதனைத் தொடர்ந்து மூவரின் உடல்களும் முறைப்படி அடக்கம் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தால் 3 கிராம மக்கள் உள்பட நெல்லை மாவட்டம் சோகத்தில் மூழ்கி உள்ளது.

Related Stories: