300 அரசுப் பேருந்துகள் சென்னையில் முடக்கம்; மக்களுக்கான சேவையை முடக்கி, அரசுப் பணத்தை வீணடிக்கும் செயலைக் கைவிட வேண்டும்: எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்!

சென்னை: புதிய வழித்தடத் தொடக்க விழா என்ற பெயரில் 300 அரசுப் பேருந்துகள் சென்னையில் முடக்கம். மக்களுக்கான சேவையை முடக்கி, அரசுப் பணத்தை வீணடிக்கும் செயலைக் கைவிட வேண்டும்’ என எஸ்டிபிஐ கட்சியின் மாநிலச் செயலாளர் ஷபிக் அஹம்மது தெரிவித்துள்ளார்.

மேலும் இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; “தமிழக முதல்வர் அவர்களின் பிறந்தநாளையொட்டி, புதிய வழித்தடங்களில் பேருந்துகளை இயக்குவதற்கான தொடக்க விழா என்ற பெயரில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 300-க்கும் மேற்பட்ட அரசுப் பேருந்துகள் சென்னைக்கு வரவழைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அவை கடந்த மூன்று நாட்களாகக் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் முடக்கி வைக்கப்பட்டுள்ளதும், அப்பேருந்துகளை இயக்கி வந்த ஓட்டுநர்களும், நடத்துநர்களும் எவ்வித அடிப்படை வசதிகளும் இன்றித் தவித்து வருவதும் பெரும் அதிர்ச்சியளிக்கிறது.

தமிழக அரசின் போக்குவரத்துக் கழகங்கள் ஏற்கனவே கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் சூழலில், வழக்கமான வழித்தடங்களில் ஓடிக்கொண்டிருந்த 300 பேருந்துகளைச் பல நூறு கிலோ மீட்டர்கள் கடந்து சென்னைக்குக் கொண்டு வந்து நிறுத்தியிருப்பது கண்டிக்கத்தக்கது. இதனால் பொதுமக்களின் அன்றாடப் போக்குவரத்துச் சேவை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன், போக்குவரத்துக் கழகத்திற்குத் தேவையற்ற கூடுதல் நிதி இழப்பும் ஏற்பட வாய்ப்புள்ளது.

மக்களுக்கான சேவையை முடக்கி, அரசுப் பணத்தை வீணடித்து, இப்படியொரு தொடக்க விழாவை நடத்துவது ஒரு மக்கள் நல அரசுக்கு அழகல்ல; இது ஒரு பொறுப்பான அரசுக்கு உகந்த செயலும் அன்று.

எனவே, அரசுப் பண விரயத்திற்கும், பொதுமக்களின் அவதிக்கும் வழிவகுக்கும் இத்தகைய தேவையற்ற நடவடிக்கைகளைத் தமிழக அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என வலியுறுத்துகிறேன்” இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Related Stories: