* பெற்றோர்களுடன் உள்ளிருப்பு போராட்டம்
* கூடுதல் இடம் ஒதுக்காமல் அரசு அலட்சியம்
விழுப்புரம் : விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி, மகளிர் கல்லூரிகளில் மாணவ, மாணவிகள் ேசர்வதற்கு இடம் கிடைக்காமல் மாணவ, மாணவிகள் ஏமாற்றமடைந்ததால் தங்களது பெற்றோர்களுடன் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த ஆட்சி காலங்களில் கூடுதலாக சேர்க்கைக்கு 20 சதவீதம் ஒதுக்கப்பட்ட நிலையில் தற்போதைய அரசின் அலட்சியத்தால் உயர்கல்வி செல்லும் மாணவ, மாணவிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு உயர்கல்விக்கான மாணவ, மாணவிகள் சேர்க்கை நடைபெற்று வருகின்றன. தமிழகத்தில் உள்ள சுமார் 192 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 1.25 லட்சம் இடங்களுக்கு லட்சக்கணக்கான விண்ணப்பங்கள் குவிந்துள்ளன.
தற்போது சேர்க்கை துவங்கிய நிலையில் கட்ஆப் மதிப்பெண், வெளிப்படை தன்மையின்றி மாணவ, மாணவிகள் சேர்க்கை நடைபெறுவதாகவும், இதனால் பல இடங்களில் குளறுபடி ஏற்பட்டு மாணவ, மாணவிகள் பெற்றோருடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி விழுப்புரம் அரசு மகளிர் கல்லூரிக்கு சேர்க்கைக்கு வந்த 50க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்களுக்கு கல்லூரி நிர்வாகம் சீட்டு இல்லை என்று கூறியதால் ஆத்திரமடைந்து தங்களது பெற்றோர்களுடன் கல்லூரி முன்பு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், எங்களுக்கு சேர்க்கைக்கு வரச்சொல்லி கல்லூரியிலிருந்து எஸ்எம்எஸ் வந்தது. அதில் சான்றிதழ், கல்வி கட்டணம் உள்ளிட்டவைகளை கொண்டுவரச் சொன்ன நிலையில் நாங்கள் அதற்கேற்ப தயாராக வந்தோம். ஆனால் இங்கு வந்தவுடன் சீட்டு முடிந்துவிட்டதாக கூறி வெளியேற்றுகின்றனர்.
கடந்த ஆட்சி காலங்களில் கட்ஆப் மதிப்பெண்களை வெளியிட்டு வெளிப்படைதன்மையுடன் மாணவர் சேர்க்கை நடைபெற்றது. ஆனால் தற்போது சிபாரிசு என்ற பெயரில் வருபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
எங்களைவிட குறைவான மதிப்பெண் பெற்றவர்களுக்குக்கூட சீட்டு கொடுக்கிறார்கள். ஆனால் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு சீட்டு வழங்கப்படவில்லை என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து தாலுகா காவல்நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவிகள், பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின்னர் கல்லூரி முதல்வர், பேராசிரியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கலைத்தனர்.
இதுகுறித்து பெற்றோர்கள் தரப்பில் கூறுகையில், விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.ஏ., பி.எஸ்சி உள்ளிட்ட 13 வகையான பாடப்பிரிவுகளுக்கு சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களுக்கு நடப்பாண்டு 20 ஆயிரம் விண்ணப்பங்கள் குவிந்துள்ளன.
அதேபோல் அரசு மகளிர் கல்லூரியிலும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களுக்கு இதே அளவிலான விண்ணப்பங்கள் குவிந்துள்ளதாக கல்லூரி நிர்வாகம் தெரிவிக்கின்றது. கட்ஆப் மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடைபெறவில்லை. கடந்த ஆட்சியில் கூடுதலாக 20 சதவீதம் மாணவர் சேர்க்கைக்கு அனுமதிக்கப்பட்டனர்.
ஆனால் தற்போதைய அரசில் மாணவர் சேர்க்கை குறித்தும், அதில் உள்ள முறைகேடுகள், மாணவ, மாணவிகளின் சிரமங்கள் குறித்து கண்டுகொள்ளவில்லை. கடந்தகால அரசின் திட்டங்களால் உயர்கல்வி படிப்போர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் கல்வியின் பின்தங்கிய விழுப்புரம் மாவட்டத்தில் அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கை முறைகேடுகள் குறித்து அரசு கண்டுகொள்ளாமல் உள்ளது பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மாவட்ட ஆட்சியர் நேரடியாக ஆய்வு செய்து அரசு கல்லூரிகளில் நேர்மையான முறையில் மாணவர் சேர்க்கை நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
குவிந்த சிபாரிசு கடிதங்கள் திணறும் கல்லூரி முதல்வர்கள்…….
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் சாலாமேடு டாக்டர் எம்.ஜி.ஆர். அரசு மகளிர் கல்லூரியில் மாணவ, மாணவிகள் சேர்க்கைக்கு அரசியல் சிபாரிசு கடிதங்கள் அதிகளவு குவிந்துள்ளதாம். குறிப்பாக தவெக மாவட்ட நிர்வாகிகளின் பரிந்துரை கடிதங்கள் அதிகளவு குவிந்துள்ளதாக கல்லூரி முதல்வர்கள், ஆசிரியர்கள் திணறி வருவதாகவும் கூறுகின்றனர்.
அதுமட்டுமல்லாமல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் உயர்கல்வித்துறை அமைச்சராக இருப்பதால் அக்கட்சியின் சிபாரிசு கடிதங்களும் மாணவர் சேர்க்கைக்கு அதிகளவு குவிந்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே, அரசியல் சிபாரிசுக்கு அப்பாற்பட்டு மாணவ, மாணவிகள் சேர்க்கை நேர்மையாகவும், வெளிப்படைத்தன்மையுடன் நடைபெற வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
