ஜோலார்பேட்டை : ஜோலார்பேட்டை ஒன்றியம் ஏலகிரி மலை ஊராட்சியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர்.இங்குள்ள மக்களின் முக்கிய தொழிலாக விவசாயம் இருந்து வருகிறது. இதனால் இங்குள்ள மலைவாழ் மக்கள் ஏரியிலிருந்து வெளியேறும் உபரி நீரை சேகரித்தும், கிணறு மூலமும் தண்ணீர் பயன்படுத்தி விவசாயம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் ஊராட்சி மன்ற தலைவர் ராஜஸ்ரீ கிரிவேலன், துணைத் தலைவர் திருமால், ஊராட்சி செயலாளர் பாண்டியன் உள்ளிட்டோர் அடங்கிய மன்ற கூட்டம் நடத்தப்பட்டு ஏலகிரி மலையில் உள்ள ஏரிகளை தூர்வாருதல், செக்டேம் பழுதுபார்த்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, தற்போது 14 கிராம பகுதியிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தண்ணீரை சேமிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி மஞ்சங்கொல்லை, புதூர், முத்தானூர் ஆகிய கிராமங்களில் உள்ள செக் டேம்கள் பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. அவைகள் சிதலமடைந்து தண்ணீர் சேமிக்க முடியாத நிலையில் மழை நீர் வீணாகி வெளியேறி வருகிறது. இதனை தூர்வாரி செக்டேம்களை கான்கிரீட் அமைத்து கட்டமைப்புகளை உறுதிப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் எதிர்வரும் மழைக்காலங்களில் மழைநீர் வீணாகாமல் ஏரியிலும், செக்டேம்களிலும் தண்ணீர் தேங்கி கிராம மக்களின் குடிநீர் பிரச்சனைக்கும், விவசாயத்திற்கும் பயனுள்ளதாக இருக்கும் என கருதப்படுகிறது.
