சென்னை: ஒருதலைப்பட்சமாக சபாநாயகர் நடந்துகொள்வதாக குற்றச்சாட்டி அதிமுகவினர் வெளிநடப்பு செய்ததாக எடப்பாடி பழனிசாமி கூறினார். சட்டப்பேரவையில் நேற்று அதிமுக சட்டமன்ற கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேச எழுந்தார். ஆனால், அவருக்கு பேச அனுமதி வழங்கப்படவில்லை. தொடர்ந்து அதிமுக உறுப்பினர்கள் எழுந்து பேச அனுமதி கேட்டுக் கொண்டிருந்தனர். சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்: நான் எந்த விதியை பின்பற்ற வேண்டும் எனக்கு சொல்லித்தர வேண்டாம். அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் எடுத்த முடிவுபடி, நேரம் இல்லா நேரம் கிடையாது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் போது அதிமுக உறுப்பினர் பேசும்போது, உங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம்.
எடப்பாடி: வாக்குவாதம் பண்ண வரவில்லை. மக்கள் பிரச்னை பற்றி பேச அனுமதி கொடுங்கள். (தொடர்ந்து மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தங்களை பேச அனுமதிக்கவில்லை எனக்கூறி அதிமுக எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வெளிநடப்பு செய்தனர்.) இதன் பின்னர் சட்டசபை வளாகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டி: தமிழக சட்டப்பேரவை விதி 220ன் கீழ் அதிமுக சார்பாக உரிமை மீறல் பிரச்னையை அவைக்கு கொண்டு வர அனுமதி கேட்டோம். எங்களின் கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி சபாநாயகர் அறையில் கடிதம் அளித்தார். அரசின் தனித் தீர்மானத்தில் திருத்தம் செய்ததை அவையின் கவனத்திற்கு கொண்டு வரும் வகையில், இந்த உரிமை பிரச்னையை அவையில் எழுப்ப வேண்டும் என்ற அடிப்படையில் கடிதம் கொடுத்திருந்தோம்.
பேரவைத் தலைவர் ஜீரோ அவரில் இதை எடுக்க மறுத்துவிட்டார். எங்களை பேச அனுமதிக்கவில்லை. அதனால், நாங்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தோம். விவசாயிகள் மற்றும் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் பிரச்னை பற்றி பேச அனுமதி கேட்டோம்; ஆனால் சபாநாயகர் அனுமதி மறுத்துவிட்டார். கடந்த 19ம் தேதி மேகதாது திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசினர் தனித் தீர்மானம் முதல்வரால் முன்மொழியப்பட்டது. தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குனர் வெளியிட்ட அறிக்கை கூறப்பட்டுள்ளது. பேரவை விதியின்படி தீர்மானத்தில் திருத்தம் செய்ய வேண்டுமானால் அரசின் திருத்தங்கள் முறையாக அவைக்கு தெரிவிக்கப்பட்டு, திருத்தப்பட்ட அரசினர் தனித் தீர்மானத்தை முதல்வர் முன்மொழிய வேண்டும்.
கடந்த காலங்களில் அவ்வாறுதான் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், தற்போது முதல்வர் அனுமதி பெறாமலும் திருத்தம் தொடர்பாக பேரவைக்கு அறிவிக்காமலும் திருத்தம் செய்தது அவை விதிகளுக்கும் முரணானது. சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களின் கருத்துகளை தெரிவித்த பிறகு, எதிர்க்கட்சித் தலைவர் தனது உரையில் அரசினர் தனி தீர்மானத்தில் திருத்தம் தெரிவித்து அரசுக்கு கூறியுள்ளதாக தனது உரையில் கூறினார். அதனை ஏற்றுக்கொண்டு அரசினர் தனித் தீர்மானத்தில் இணைத்துக் கொள்வதாக முதல்வர் பதிலுரையில் கூறியுள்ளார். பேரவை விதி 36/5 கீழ் திருத்தம் மேற்கொள்ளப்பட்டால் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அது தெரிவிக்கப்பட வேண்டும்.
ஆனால் முதல்வருக்கு மட்டும் அது தொடர்பான தகவல் முன்பே தெரிவிக்கப்பட்டு, பதிலை முதல்வர் வாசித்தார். அனைத்து உறுப்பினர்களுக்கும் தெரிவிப்பதற்கு முன்பு முதல்வர் தீர்மானத்தில் திருத்தம் மேற்கொண்டது அவையின் விதியை மீறிய செயல். திருத்தம் முறையாக அவையில் முன்மொழிபட்டு, வழிமொழியப்பட்டு, விவாதிக்கப்பட்டு திருத்தம் பேரவையால் ஏற்கப்படும் நிகழ்வில் மட்டுமே வரைவுத் தீர்மானத்தில் சேர்க்க இயலும். பேரவைக்கு அளிக்க வேண்டிய தகவல்களை அளிக்காமல், ஒருதலைப்பட்சமாக பேரவைத் தலைவர் நடந்து கொண்டதாகவே கருத வேண்டியுள்ளது.
வருங்காலத்தில் இதுபோன்ற விதிமுறைகள் நடைபெறாமல் இருப்பதை பேரவைத் தலைவர் உறுதி செய்ய வலியுறுத்துகிறேன். திருத்தம் செய்யப்படாத வரைவு தீர்மானத்தை மட்டுமே அதிமுக ஆதரித்தோம். ஆனால், சட்டமன்றத்தில் முன்மொழியப்படாத, திருத்திய தீர்மானத்தை நாங்கள் ஆதரிக்கவில்லை. இதைத்தான் சட்டப்பேரவையில் உரிமை மீறல் பிரச்னையாக கொண்டு வந்தேன். விதிகளுக்கு புறம்பாக திருத்தத்தை முதல்வரின் பதில் உரையில் தெரிவித்துள்ளார். இது வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியது. இதைபற்றி பேசுவதற்காக தான் நாங்கள் உரிமை மீறல் மனு அளித்தோம். ஆனால் சபாநாயகர் அதற்கு அனுமதி அளிக்கவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.
