சென்னிமலை அருகே விவசாயிகளுக்கு பூச்சி நோய் கட்டுப்பாடு குறித்த பயிற்சி முகாம்

சென்னிமலை : சென்னிமலை அருகே விவசாயிகளுக்கு பயிர்களில் பூச்சி நோய் கட்டுப்பாடு முறைகள் குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது. சென்னிமலை வட்டார வேளாண்மை தொழில் நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு முகாசிபிடாரியூர் கிராமத்தில் தாவர வழி பொருட்களை கொண்டு பயிர்களில் பூச்சி நோய் கட்டுப்பாடு முறைகள் குறித்த பயிற்சி முகாமில், சென்னிமலை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் (பொறுப்பு) சசிகலா கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், ‘‘தற்போது விவசாயிகள் அதிக அளவு பூச்சிக்கொல்லி, களைக்கொல்லி மருந்துகள் மற்றும் அதிகமான செயற்கை உரங்களை பயன்படுத்துவதால் மண்வளம் கெடுவதோடு விளைச்சல் குறைவதற்கு காரணமாகிறது.

எனவே, விளை நிலம் காப்போம் என்ற விழிப்புணர்வு மூலம் இயற்கை முறையில் பூச்சி மற்றும் நோய் கட்டுப்பாடு செய்வது குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு பயிற்சி அனைத்து கிராமங்களிலும் நடைபெற்று வருகிறது. இதனை விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்’’ என்றார்.

முகாமில், கோபி மைராடா வேளாண்மை அறிவியல் நிலையத்தை சேர்ந்த ஜான் பிரபாகரன் கலந்து கொண்டு பேசுகையில், ‘‘மண்ணில் உள்ள சத்துக்களை அறிய மண் மாதிரி எடுப்பதன் முக்கியத்துவம் மற்றும் ரசாயன உரம் பயன்பாட்டை குறைப்பது குறித்தும், பசுந்தாள் உரங்கள், உயிர் உரங்கள், உயிர் பூஞ்சான கொல்லிகள், இயற்கை வழி இடுபொருட்களை தயாரித்து பயன்படுத்தலாம்’’ என்றார்.

மேலும், எருக்கு, நொச்சி, வேம்பு, கரு ஊமத்தை, ஆடாதொடை போன்ற தாவர பொருட்களை கொண்டு பூச்சிக்கொல்லி தயாரிப்பது குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. பயிற்சி முகாமில் 40க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

பயிற்சி முகாமுக்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் வேலுமணி, உதவி தொழில்நுட்ப மேலாளர் மகேஸ்வரி ஆகியோர் செய்திருந்தனர்.

Related Stories: