பாட்னா: “என்னையும், என் தந்தை லாலு பிரசாத் யாதவையும் கொல்ல சதி செய்கிறார்கள்” என லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜ் பிரதாப் குற்றம்சாட்டி உள்ளார். பீகார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத் யாதவ், ராஃப்ரி தேவியின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ். ஏற்கனவே திருமணமான தேஜ் பிரதாப் அனுஷ்கா யாதவ் என்ற பெண்ணுடன் உறவில் இருப்பதாக தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டார். இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தேஜ் பிரதாப்பை ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியில் இருந்து நீக்கி லாலு பிரசாத் நடவடிக்கை எடுத்தார். பின்னர் ஜனசக்தி ஜனதா தளம் என்ற புதிய கட்சியை தொடங்கிய தேஜ் பிரதாப் யாதவ், பீகார் பேரவை தேர்தலில் மஹூவா தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
அவரது கட்சியினரும் தோல்வி அடைந்தனர். இந்த நிலையில் தன்னையும், தன் தந்தையையும் கொலை செய்ய தனது முன்னாள் உதவியாளர் ஆகாஷ் யாதவ் மற்றும் அவரது குடும்பத்தினர் சதி செய்வதாக தேஜ் பிரதாப் யாதவ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக பாட்னாவில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தேஜ் பிரதாப் யாதவ், “என் தந்தை உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். என்னையும், என் தந்தையையும் கொலை செய்ய எனது முன்னாள் உதவியாளர் ஆகாஷ் யாதவ் மற்றும் அவரது குடும்பத்தினர் சதி செய்கின்றனர். ஆகாஷ் யாதவ் எதிர்க்கட்சியினருடன் சேர்ந்து எங்களை கொல்ல திட்டமிட்டிருக்கலாம். இதுபற்றி சச்சிவாலாயா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளேன். காவல்துறையினர் ஆகாஷ் யாதவ், அவரது சகோதரி அனுஷ்கா யாதவ் மற்றும் 6 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். முதல்வர் எங்களுக்கு போதிய பாதுகாப்பை வழங்க வேண்டும்” என்றார்.
