தாரகேஸ்வர்: மேற்கு வங்கம் தனது தடைகளை தகர்த்து வெளியேறி, புதிய வளர்ச்சிப் பயணத்தை தொடங்கியிருப்பதாக பிரதமர் மோடி கூறினார். மேற்கு வங்க மாநில தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, 2 நாள் பயணமாக மேற்கு வங்கம் சென்ற பிரதமர் மோடி தாரகேஸ்வரில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்து, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
அப்போது அவர் பேசியதாவது:
தேர்தல்கள் மற்றும் பதவியேற்பு விழாவிற்குப் பிறகு முதல்முறையாக உங்கள் மத்தியில் வரும் நல்வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. மேற்கு வங்கத்தின் காற்றில் இப்போது புதிய புத்துணர்ச்சி உள்ளது. மேற்கு வங்கம் தனது தடைகளை உடைத்து வெளியேறியது போலவும், அதன் பெருமை மீண்டும் திரும்பத் தொடங்கியுள்ளது போலவும் உணர்கிறேன். மேற்கு வங்க மக்களின் முகங்களில் பொலிவு தெரிகிறது. கிராமங்களில் மகிழ்ச்சியும் நம்பிக்கையும் நிலவுகிறது. உங்கள் ஒரு வாக்கு எவ்வாறு மாற்றத்தை கொண்டு வரும் என்பது மேற்கு வங்கத்தில் தெளிவாக தெரிகிறது. இன்று தொடங்கப்பட்ட புதிய திட்டங்களும், அடிக்கல் நாட்டப்பட்ட பணிகளும் மேற்கு வங்கம் தனது புதிய எதிர்காலத்தை உருவாக்கும் பணிகளை தொடங்கியுள்ளதற்கான சான்றாகும்.
இம்மாநிலம் புதிய வளர்ச்சிப் பயணத்தை தொடங்கியிருக்கிறது. இந்த வளர்ச்சிக்காக பாஜ அரசு மிக வேகமாக செயல்படத் தொடங்கி உள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார். இந்நிகழ்ச்சியில், பிஎம்-கிசான் திட்டத்தின் 23வது தவணைத் தொகையாக விவசாயிகளுக்கு ரூ.18,880 கோடியை பிரதமர் மோடி விடுவித்தார். இதன் மூலம் நாடு முழுவதும் 9.44 கோடி விவசாயிகள் பயன் அடைவர்.
