நன்றி குங்குமம் தோழி
மெக்சிகோவில் தெருக்களில் வாழும் ஆதரவற்ற சிறார்களுக்கான உலக கால்பந்தாட்ட போட்டி கடந்த மாதம் 5ம் தேதி முதல் 15ம் தேதி வரை நடைபெற்றது. அந்தப் போட்டியில் சென்னையை சேர்ந்த ‘கருணாலயா’ பெண்கள் கால்பந்தாட்டக் குழு பங்கேற்று அரை இறுதி வரை முன்னேறியது. 13 முதல் 18 வயதிலுள்ள 10 பெண்கள் அடங்கிய அணி இந்தப் போட்டியில் பங்கு பெற்றது.
சென்னை, தண்டையார்பேட்டையில் 31 ஆண்டுகளாகச் செயல்பட்டுவரும் ‘கருணாலயா சமூக சேவை சங்கம்’ சென்னையில் தெரு மற்றும் வாழ்வாதாரத்திற்காக வேலை செய்யும் குழந்தைகளின் பாதுகாப்பு, முன்னேற்றத்திற்காக பாடுபடும் தன்னார்வ அமைப்பு. அரசாங்கத்துடன் இணைந்து, மத்திய – மாநில அரசு சமூக பாதுகாப்புத் துறைகள் ஒத்துழைப்பு உதவிகளுடன் ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம் (ICPS) – ஆண் குழந்தைகளுக்கான பாதுகாப்பு இல்லம் மற்றும் சென்னை மாநகராட்சியின் மூலம் வீடற்ற பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பு இல்லம் போன்ற திட்டங்களை கருணாலயா செயல்படுத்தி வருகிறது.
சுகாதார சூழலில் கல்வி கற்க வைத்து, விளையாடவும் வாய்ப்புகள் வழங்கி,ஆதரவற்ற சிறார்களுக்கு பாதுகாப்பான எதிர்காலத்தை உறுதிப்படுத்துவது கருணாலயாவின் முக்கிய குறிக்கோள். நடுத்தர குடும்பத்தினர் அனைவருக்கும் பொருளாதாரம் காரணமாக உள்நாட்டு விமானப் பயணம் சாத்தியம் இல்லாத நிலையில், ஆதரவற்ற சிறார்கள் விமானத்தில் வெளிநாட்டுப் பயணத்தை கனவில் கூடபார்க்க முடியாது. ஆனால், ‘கருணாலயா’ சிறார்கள் பலமுறை வெளிநாடுகள் சென்று வந்துள்ளனர். இது குறித்து ‘கருணாலயா’வின் பொறுப்பாளர் முனைவர் பாலசந்தர் சிங் பகிர்ந்தார்.
‘‘ஒவ்வொரு FIFA உலகக் கோப்பை போட்டிகளுக்கு முன்னதாக தெருக்களில் வாழும் ஆதரவற்ற சிறார்களுக்கான கால்பந்தாட்டப் போட்டிகள் உலகளவில் நடைபெற வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்தக் கால்பந்தாட்டப் போட்டியில் உலகம் முழுவதும் 29 அணிகள் பங்கு பெற்றன. அதில் 16 பெண்கள் மற்றும் 13 ஆண்கள் அணிகள் கலந்து கொண்டன. தெருக்களில் வாழும் ஆதரவற்ற சிறார்களுக்கான ‘Street Child World Cup’ என்பது தெருக் குழந்தைகளின் மீதான தீண்டாமையை தவிர்க்கவும், அவர்களின் உரிமைகளை முன்னிறுத்தவும் விளையாட்டு, கலை மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் உருவான உலகளாவிய இயக்கமாகும்.
‘Street Child United (UK)’ இந்த சர்வதேச போட்டிகளை ஏற்பாடு செய்து, தெருவாழ் குழந்தைகள் உலக அரங்கில் தங்களின் விளையாட்டுத் திறமைகளை வெளிப்படுத்தும் வாய்ப்பை வழங்குகிறது. 2010ல் தென்னாப்பிரிக்காவில் தொடங்கிய இந்த உலகக் கோப்பை போட்டி பின்னர் பிரேசில் (2014), மாஸ்கோ (2018), கத்தார் (2022) ஆகிய இடங்களில் நடைபெற்றுள்ளது. 2019 முதல் ‘Street Child Cricket World Cup’ லண்டன் மற்றும் கேம்பிரிட்ஜில் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக 2023ல் சென்னை நகரிலும் நடத்தப்பட்டது.
இந்த உலகக் கோப்பை மூலம் உலகம் முழுவதும் உள்ள தெருவாழ் குழந்தைகள் ஒன்றிணைந்து கால்பந்து விளையாடுவதுடன், கலை நிகழ்ச்சிகள் மற்றும் குழந்தைகளுக்கான கருத்தரங்குகளில் பங்கேற்று தங்களின் உரிமைகளை, கனவுகளை வெளிப்படுத்துகின்றனர். இந்தியாவின் தெருவாழ் சிறார்களின் ஒரே அணியான சென்னை அணியில் இடம்பெற்றுள்ள சிறார்கள், இளம் வயதினர், கருணாலயாவின் பாதுகாப்பு இல்லங்களில் வசிக்கிறார்கள். வெளிநாடு மற்றும் சென்னையில் உள்ள அறக்கட்டளை மற்றும் அமைப்புகளின் ஆதரவுடன் ‘கருணாலயா’வின் சிறார்கள் விளையாட்டு, கல்வி மற்றும் தலைமைத்துவ திறன்களில் வளர்ச்சியடைந்துள்ளனர்.
நெதர்லாந்தைச் சேர்ந்த Stichting ZIJN அமைப்பின் உதவியால் இந்தக் குழந்தைகள் வெளிநாட்டுப் பயணம் செய்யும் அபூர்வ வாய்ப்பைப் பெற்றனர். சென்னை நகரில் தலைமை பயிற்சியாளர் மனோகரன் மற்றும் பிற பயிற்சியாளர்களின் கீழ் தீவிரமாக பயிற்சி பெற்று வருகின்றனர். இந்த உலகக் கோப்பையில் பங்கேற்பதில் முக்கிய சவால்கள் குழந்தைகள் மற்றும் பெற்றோரின் அடையாள அரசு ஆவணங்கள் கிடைக்காமல் போனதுதான்.
2014ல் ரியோ டி ஜெனீரோ, 2016ல் ரியோ, 2018ல் ரஷ்யா, 2019ல் லண்டன், 2022ல் கத்தாரில் நடைபெற்ற போட்டிகளில் எங்க அமைப்பின் சிறார்கள் பங்கேற்றுள்ளனர். 2016ல் ரியோவில் நடைபெற்ற Street Child Games போட்டியில் மாணவி ஹெப்சிபா தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றார். 2019ல் லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற கிரிக்கெட் உலகப் போட்டியில் எங்களின் அணி உலகக் கோப்பையை வென்றது. 2022ல் கத்தாரில் நடைபெற்ற உலகக் கால்பந்து போட்டியில் காலிறுதி சுற்று வரை முன்னேறினர். மெக்சிகோ செல்ல பயணச் செலவுக்காக பல அமைப்புகளை அணுகிய போது உதவுவதாக கூறினார்கள். ஆனால், தகுந்த நேரத்தில் அவர்களின் உதவி கிடைக்கவில்லை.
இறுதியாக, நெதர்லாந்தில் உள்ள ‘ஸ்டிச்சிங் ஜிஜின்’ என்ற அமைப்பு ஆதரவளித்தனர். பல சிக்கல்களுக்கு மத்தியில்தான் இந்தப் போட்டியில் பங்கு பெற முடிந்தது. விசா பிரச்னை மற்றும் வளைகுடா யுத்தம் காரணமாக விமானக் கட்டணம் உயர்வு என அனைத்தையும் சமாளித்துதான் பயணித்தோம். அங்கு இங்கிலாந்தின் ஸ்ட்ரீட் சைல்ட் யுனைடெட் உலகக் கோப்பை போட்டி நடத்தும் அமைப்பு, ஃபுட்பால்மாஸ் மெக்சிகோ என்னும் உள்ளூர் புரவலர் அமைப்பு, நாங்க தங்குவதற்கான ஏற்பாடுகளை பிரமாதமாக செய்திருந்தன. எல்லாவற்றிற்கும் மேலாக, மெக்சிகோ நாட்டு ஜனாதிபதி விளையாட்டுக் குழுவினரைச் சந்தித்து தன் பாராட்டுகளை தெரிவித்தார். மாணவர்களால் மறக்க முடியாத தருணம் அது’’ என்றார் பாலசந்தர் சிங்.
தொகுப்பு: கண்ணம்மா பாரதி
