குழந்தைகளின் ஸ்க்ரீன் நேரத்தை குறைப்பதே எங்கள் குறிக்கோள்!

நன்றி குங்குமம் தோழி

ஒன்று முதல் ஐந்து வயதுள்ள குழந்தை பருவம் என்பது உடல், மொழி மற்றும் உணர்வு ரீதியாக வேகமாக வளரும் பருவமாகும். இத்தகைய பருவத்தில் உள்ள குழந்தைகளை பராமரிப்பது பெற்றோர்களுக்கு சவாலான ஒன்றாக மாறி வருகிறது. குறிப்பாக பள்ளிக்கு போகாத 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை கவனிப்பதில் அதிக அக்கறையும் கவனமும் தேவைப்படுகிறது. பெற்றோராக அவர்களின் உடல், மனம் மற்றும் அறிவு வளர்ச்சிக்கு தேவையான அனைத்து வசதிகளையும் வாய்ப்புகளையும் ஏற்படுத்தித் தருவது அவசியமாகிறது. இந்த சமயத்தில் முறையான ஊட்டச்சத்து, போதுமான தூக்கம், கல்வி, அன்பான வழிகாட்டுதல் எல்லாம் முக்கியமான தேவைகளாகும்.

ஆனால், இன்றைய பொருளாதார சூழலை சமாளிக்க பெரும்பாலான பெற்றோர்கள் வேலைக்குச் செல்பவராக இருக்கின்றனர். வீட்டில் குழந்தைகளை பராமரிக்க ஆள் இல்லாத காரணத்தினால் டே கேர் போன்றவற்றில் சேர்க்கிறார்கள். வீட்டிலிருக்கும் குழந்தைகளுக்கோ செல்போன்தான் உலகமாக இருக்கின்றது. குறுநடை போடும் குழந்தைகளை கட்டுப்படுத்த செல்போன்களை கையில் கொடுத்துவிடுகின்றனர். அப்படி இல்லையென்றால் டிவியில் கார்ட்டூனை போட்டுவிட்டு பெரியவர்களும் அவர்களுக்கான வேலையை பார்க்க துவங்கிவிடுகின்றனர். பாதுகாப்பின்மையால் குழந்தைகளை வெளியே விளையாடவும் அனுமதிப்பதில்லை.

ஒட்டுமொத்தமாக பார்த்தால் டிவி, செல்போன், வீடியோ கேம் என குழந்தைகளின் ஸ்கிரீன் டைம் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. அவர்களின் வெளிப்புற மற்றும் உடல், மூளை சார்ந்த செயல்பாடுகள் குறைய தொடங்கியுள்ளன. எனவே, பெற்றோர்கள் ஏதேனும் மாற்று வழியைத் தந்து தங்கள் குட்டிக் குழந்தைகளை செல்போன் அடிக்சனில் இருந்து மீட்டு அவர்களின் கண்கள் மற்றும் மூளை பாதிப்பை காப்பாற்றினால் போதும் என்கின்றனர்.

இதற்கான சிறந்த வழி எங்களிடம் உண்டு என்கிறார் ஆர்த்தி அருண்குமார். ‘தி டாட்லர் ஹவுஸ்’ என்ற நிறுவனத்தின் மூலம் 35 தீம்களில் 250 வகையான ஆக்டிவிட்டி சம்பந்தமான புத்தகங்களை ஆன்லைனில் ஈ- காமர்ஸ் பிளாட்ஃபார்ம் மூலம் விற்பனை செய்கிறார். எங்களின் தயாரிப்புகள் நிச்சயம் செல்போன் மற்றும் டிவி ஸ்கிரீனிலிருந்து குழந்தைகளை மீட்டெடுக்கும் என்று நம்பிக்கையுடன் கூறும் அவருடன் பேசியதிலிருந்து…

‘‘எனக்கு சொந்த ஊர் தென்காசி பாவூர் சத்திரம். நான் எம்.இ கம்ப்யூட்டர் சயின்ஸ் முடிச்சிருக்கேன். கணவர் டிம்பர் பிசினஸ் செய்கிறார். நான் இந்த பிசினஸுக்குள்ள வந்தது தற்செயலானது. ஆனால், அதுவே இன்று எனக்கான அடையாளமாக மாறிவிட்டது. என் மகளுக்கு இரண்டு வயது இருக்கும் போது அவளை மொபைல் பார்க்காம தடுக்க என்ன பண்ணலாம்னு யோசிக்கும் போது பிக்சர்ஸ் வைத்து சின்ன ஆக்டிவிட்டி புக் செய்தேன்.

அவளுக்கு மிகவும் பிடிச்சுப் ேபானது. அப்போது கொரோனா காலம் மற்றும் சோசியல் மீடியா வளர்ந்த நேரம். நான் என் புத்தகத்தை முகநூலில் போட்டோ எடுத்துப் போட்டேன். சிலர் அதைப் பார்த்து தங்களுக்கும் புத்தகம் வேண்டும் என்று கேட்டார்கள். கொஞ்சம் கொஞ்சமா என் யோசனையை விரிவுப்படுத்தினேன். அதுதான் ‘தி டாட்லர் ஹவுஸ்’ ஆன்லைன் செல்லிங் நிறுவனமாக மாறியது’’ என்று தன் முதல் முயற்சி குறித்து பேசத் தொடங்கினார்.

‘‘எங்களோட புக்ஸ் சாதாரண காகிதத்தால் கொண்டு தயாரிக்கப்பட்டதில்லை.‘லேமினேட்டட் பிசி புக்ஸ்னு’ சொல்வாங்க. இரண்டு முதல் ஐந்து வயது குழந்தைகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்டவை. இந்த வயதுக்குரிய குழந்தைகளின் அறிவு, மொழி வளர தேவையானவை எல்லாம் இந்தப் புத்தகங்களில் படங்களாக இருக்கும். காய்கறிகள், பழங்கள், நிறங்கள், விலங்குகள், தமிழ், ஆங்கில எழுத்துகள், உறவுகள், உடல் உறுப்புகள், நல்ல பழக்க வழக்கங்கள், பசில்ஸ், பொது இடங்கள், சமூக உதவியாளர்கள், அடிப்படை கணக்குகள் என அனைத்தும் படங்களாக சித்தரிக்கப்பட்டிருக்கும். லாமினேட் செய்யப்பட்ட படங்கள் என்பதால் குழந்தைகளால் கிழிக்க முடியாது. குழந்தைகள் கையில் எடுத்து ஒட்டுவது போன்ற ஆக்டிவிட்டி உள்ளதால் குழந்தைகள் அதிகம் விரும்புகிறார்கள்’’ என்கிறார் ஆர்த்தி அருண்குமார்.

‘‘என் மகளுக்கு என்னவெல்லாம் தெரிய வேண்டும் என்று விரும்புகிறேனோ அதனையே மையமாக வைத்து எனக்குள் இருக்கும் கணினி அறிவை பயன்படுத்தி படங்களை கிரியேட்டிவாக நானே டிசைன் செய்தேன். அதை என் டீமிடம் கொடுத்து கத்தரிக்க செய்யச் சொல்வேன். அதில் வால்க்ரோ என்ற ஒட்டுதலுக்குரிய ஸ்டிக்கரை பொருத்தி ஸ்பைரல் பைண்டிங் செய்து புத்தகமாக கொடுக்கிறோம்.

குழந்தைகள் புத்தகங்களில் உள்ள படங்களை புரிந்து அதே மாதிரியான படங்களை தேடி ஒட்ட வேண்டும். இதுதான் ஆக்டிவிட்டி. இப்போது நிறங்கள் தீம் என்றால் அந்த நிறத்திற்குரிய படங்கள் இருக்கும். அதை அந்தந்த இடத்தில் ஒட்ட வேண்டும். இதன் மூலம் நிறங்களையும் அந்த நிறத்தில் உள்ள பொருட்களையும் குழந்தைகள் அறிவார்கள். ஒரு தடவை பெற்றோர் வழிகாட்டினால் போதும் குழந்தைகள் தானாக செய்ய ஆரம்பித்துவிடுவார்கள்’’ என்கிறார்.

‘‘நான் என் குழந்தையை மனதில் வைத்து உருவாக்கிய புத்தகங்களையே தான் பெரும்பாலும் பெற்றோர்களும் ஆசிரியர்களும் மற்றும் பள்ளிகளிலிருந்தும் கேட்கிறார்கள். சில பள்ளிகள் மற்றும் பெற்றோர்களின் விருப்பத்திற்கு ஏற்ப கஸ்டமைசும் செய்து தருகிறேன். ‘ஆல் இன் ஒன் ஆக்டிவிட்டி’ புத்தகம்தான் முதன்முதலில் நான் உருவாக்கினேன். என் மகளுக்காக நான் தனித்தனி அட்டையாக செய்து அதை பிறகு புத்தகமாக மாற்றினேன். அதில் டாக்டர், ஸ்கூல், கடல் என வடிவமைத்திருப்பேன். அதற்கேற்ப உபகரணங்கள் படங்களாக இருக்கும். வார்த்தைகளை கற்றுக் கொள்ள விரும்பும் குழந்தைகளுக்கு ஏற்றது போலவும் படங்கள் சேர்த்து உருவாக்கப்பட்ட போனிக்ஸ் புத்தகங்களும் இருக்கின்றன. மாண்டசரி பள்ளிக் குழந்தைகளும் பள்ளிக்கு செல்லாத குழந்தைகள்தான் என்னுடைய டார்கெட்’’ என்கிறார் ஆர்த்தி.

‘‘எங்கள் தயாரிப்புகள் முக்கியமாக அமேசானில் விற்பனையாகின்றன. தனிப்பட்ட எங்கள் வெப்சைட்டிலும் கிடைக்கும். மற்ற நிறுவனங்கள் எங்கள் தயாரிப்புகளை வொய்ட் லேபிள் செய்தும் விற்பனை செய்கின்றனர். இந்தியா முழுவதும் நிறைய ரீசெல்லர்களும் இருக்கின்றனர். அவர்கள் மூலமாகவே அதிகமாக ஆர்டர்கள் வருகின்றன. தேவையான உபகரணங்களை எல்லாம் வட இந்தியாவில்தான் வாங்குகிறோம். அந்த வேலைகளை என் கணவர் பார்த்துக் கொள்கிறார். லேமினேஷன் புத்தகங்களை தொடர்ந்து மரத்தாலான ஆக்டிவிட்டி சம்பந்தமான தயாரிப்புகளை உருவாக்கலாம் என்று முயற்சித்து வருகிறோம்.

எங்கள் நிறுவனத்தின் முக்கிய பணியே படங்களை வெட்ட வேண்டும். என்னால் அனைத்து வேலைகளுக்கும் மிஷின்களை பயன்படுத்த முடியும். நகர்ப்புறங்களில் கட்டிங் மிஷின்களைத்தான் பயன்படுத்துகிறார்கள். அதனால் என்னிடம் வேலை கேட்டு வரும் சுற்று வட்டார கிராமப்புற பெண்களுக்கு வேலை தர முடியாமல் போய்விடுகிறது. அதிகளவில் மற்றும் சில கடினமான படங்களை வெட்ட மிஷின்களைத்தான் பயன்படுத்துகிறோம்.

தற்போது எங்களிடம் 15 பெண்கள் வேலை செய்கின்றனர். இன்னும் சிலரை பணியமர்த்த திட்டமிட்டுள்ளேன். இன்றைய குழந்தைகளை மொபைல் அடிக்சனிலிருந்து மீட்டு ஸ்கிரீன் டைமை குறைத்து அவர்களின் கவனம் ஆக்டிவிட்டி பக்கம் திரும்புவதற்கு எங்கள் தயாரிப்புகள் காரணமாக இருக்க வேண்டும். சின்னஞ்சிறு பிஞ்சுகள் டெக்னாலஜி மற்றும் சோசியல் மீடியாவிற்கு அடிமையாவதை தடுப்பதே எங்கள் குறிக்கோள்’’ என்கிறார் இளம் தொழிலதிபரான ஆர்த்தி அருண்குமார்.

செய்தி: கலைச்செல்வி

Related Stories: