ஒரு கப் ஆக்ஸிஜன்

நன்றி குங்குமம் தோழி

‘‘உணவு, தங்குமிடம், உடை மூன்றும் ஒரு காலத்தில் அத்தியாவசியமாக இருந்தது. ஆனால், இன்று தூக்கம், கவனம், விழிப்புணர்வு மிகவும் முக்கியமாக பார்க்கப்படுகிறது. இதற்கு காரணம் நம்முடைய அங்கமாக மாறியிருக்கும் செல்போன். உடம்பு சரியில்லை என்றால் மருத்துவரை அணுகலாம். அதேபோல் மன உளைச்சலுக்கும் தெரபி உள்ளது. ஆனால், நல்வாழ்விற்கு…. சில விஷயங்களை சில மணி நேரம் தள்ளி வைக்க வேண்டும்.

இன்று நம்முடைய வாழ்வில் மிகப் பெரிய பாதிப்பினை செல்போன் ஏற்படுத்தி வருகிறது. காலை எழுந்த நேரம் முதல் இரவு படுக்கும் வரை செல்போன் நம்மை ஆட்கொண்டுள்ளது. விளைவு தூக்கமின்மை, கவனக்குறைபாடு. இந்தப் பிரச்னைகளில் இருந்து விலக விழிப்புணர்வும் அவசியமாக உள்ளது. இன்றைய காலகட்டத்தில் செல்போன் இல்லாமல் வாழ முடியாது. ஆனால், அதன் பயன்பாட்டினை குறைத்துக் கொள்ள முடியும்’’ என்கிறார்கள் சந்தோஷ் மற்றும் சதீஷ் சகோதரர்கள். இவர்கள் முழுக்க முழுக்க ஒலி வடிவில் ‘Tale O Meter’ என்ற ஆப்பினை அறிமுகம் செய்துள்ளனர். அதில் ‘ஒரு கப் ஆக்ஸிஜன்’ என்ற பகுதியில் நாம் இழந்த தூக்கம் மற்றும் கவனச்சிதறல்களை மீட்டுத் தரமுடியும் என்கிறார்கள்.

‘‘சென்னைதான் எங்களின் பூர்வீகம். இருவரும் பொறியியல் பட்டதாரிகள். பிறகு வெளிநாட்டில் வேலை. அங்கு செட்டிலாக விருப்பமில்லாத காரணத்தால் சென்னைக்கே வந்துவிட்டோம்” என்று பேச ஆரம்பித்தார் சந்தோஷ். ‘‘இங்கு இருவரும் சேர்ந்து வேலை செய்ய திட்டமிட்டோம். ஆரம்பத்தில் நெட்பிளிக்ஸ், அமேசான் போன்ற ஓ.டி.டி தளங்களில் ஒளிபரப்பப்படும் பிற மொழி வெப் சீரீஸ்களை தமிழாக்கம் செய்தோம். ஒரு மொழியினை தமிழாக்கம் செய்யும் போது வார்த்தைகள் மட்டுமில்லாமல் கதாபாத்திரத்திற்கு ஏற்ற குரல்களையும் கவனமாக கையாள வேண்டும். அந்த சமயம் கோவிட் பாதிப்பு ஏற்பட்டது. அதன் பிறகு சமூக வலைத்தளங்களின் பயன்பாடு மக்கள் மத்தியில் அதிகரித்தது.

உணவு முதல் ஒருவரின் அன்றாட வாழ்க்கையில் நடைபெறும் நிகழ்வுகளை இதில் பதிவிட ஆரம்பித்தார்கள். அதையும் மக்கள் ரசித்தார்கள். சிறு தொழில்முனைவோர்களின் பிசினஸ் தளமாகவும் உருமாறியது. பிசினஸ் வளர்ந்தாலும், மறுபக்கம் சாதாரண மக்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் சமூக வலைத்தளங்களில் மூழ்க ஆரம்பித்தனர். இது நாளடைவில் பெரிய பாதிப்பினை ஏற்படுத்தும் என்ற எண்ணம் எங்களுக்கு ஏற்பட்டது.

சமூக வலைத்தளங்களில் வெளியாகும் ரீல்ஸ் சில வினாடிகள் என்பதால், அது மக்கள் விரும்பினார்கள். விளைவு ஒரு விஷயத்தின் மேல் கவனம் செலுத்துவது குறைந்தது. தூக்கத்தை இழக்கவும் செய்தார்கள். முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும் என்பதால், அதற்கான தீர்வு ஒரு ஆப்பாக அமைத்தோம். அப்படித்தான் ‘Tale O Meter’ துவங்கப்பட்டது’’ என்றவரை தொடர்ந்தார் சதீஷ்.

‘‘இது முழுக்க முழுக்க ஒலி வடிவிலான தளம். இதில் கதை, குழந்தைகளுக்கான குட்டிக் குட்டி செய்திகள், விளையாட்டு, சிந்திக்கக்கூடிய விஷயங்கள் என தனித்தனி பகுதியாக வடிவமைத்திருக்கிறோம். அதில் ஒரு பகுதிதான் ‘ஒரு கப் ஆக்ஸிஜன்’. இன்று பெரும்பாலும் பலர் தூக்கமின்மை மற்றும் கவனச்சிதறல்களால் பாதிக்கப்படுகிறார்கள். அவர்களுக்கே தெரியாமல் செல்போன் அவர்களின் மொத்த நேரத்தையும் விழுங்கிக் கொண்டிருக்கிறது.

தூக்கத்தை இழக்கிறார்கள். ஒரு விஷயத்தின் மேல் முழு கவனம் செலுத்தாமல் விரல் நுனிகளால் அடுத்த செய்திக்கு தாவுகிறார்கள். அதை மனதில் கொண்டு முழுக்க முழுக்க ஒலி சார்ந்து அமைத்திருக்கிறோம். அதே சமயம் ஸ்க்ராலிங் வசதியும் இதில் கிடையாது. ஒரு செய்தியை முழுமையாக கேட்ட பிறகுதான் அடுத்த செய்தி வெளியாகும். அதே சமயம் ஒரு நாளைக்கு ஒரு செய்தி என்பதால், செல்போனின் பயன்பாடும் குறையும்’’ என்றவரை தொடர்ந்த சந்தோஷ் இதன் செயல்பாட்டினை பற்றி விவரித்தார்.

‘‘உடல் ஆரோக்கியத்திற்கு தூக்கம் அவசியம். அதற்கு ஒரு சிலர் டிஜிட்டல் டீடாக்ஸ் செய்வதாக கூறுவார்கள். ஆனால், அதை சரியான முறையில் கடைபிடிக்கிறோமா? காரணம், அந்த அளவிற்கு செல்போனின் ஆதிக்கம் உள்ளது. மேலும் இப்போது AI வரவினால் சிந்தனையும் முழுக்க மழுங்கடிக்கப்படுகிறது. நாம் என்ன பார்க்க வேண்டும் என்று AIதான் தீர்மானிக்கிறது. அந்த
அல்காரித முறையில் கட்டுப்பட்டிருக்கிறோம். உதாரணத்திற்கு உடை சார்ந்து நாம் ஒரு விஷயம் தேடி இருப்போம். அதற்கு பிறகு அது சார்ந்த விஷயங்களாக மட்டுமே நம்முடைய வலைத்தளத்தில் குவிய ஆரம்பிக்கும். இதனை கவனத்தில் கொண்டுதான் வடிவமைத்திருக்கிறோம்.

தூக்கம், ஒரு மனிதனுக்கு மிகவும் முக்கியம். நன்றாக தூங்கினால் சுறுசுறுப்பாக இயங்க முடியும். மாத்திரை இல்லாமல் தூக்கத்தை வரவழைக்க ஒரே தீர்வு கதை தான். சின்ன வயசில் பாட்டி கதை சொல்ல கேட்டு தூங்கி இருப்போம். அதையே பெரியவர்களுக்கும் சொல்ல முடிவு செய்தோம். தூக்கத்தை வரவழைக்கக்கூடிய அம்சங்களை கதையில் இணைத்து கொடுக்கும் போது நம்மை அறியாமல் ஆழ்ந்த தூக்கத்திற்கு தள்ளப்படுவோம். அதாவது, கதை சொல்லும் குரல் மற்றும் பின்னணியில் ஒலிக்கும் இசை என அனைத்தும் தூக்கத்தை தூண்டும்.

கவனச்சிதறலை ஒரு நாளில் சரி செய்திட முடியாது. அது ஒரு நீண்டப் பயணம். ஒரு விஷயத்தை கவனிப்பது மட்டுமில்லாமல், அதை நினைவிலும் கொள்ள வேண்டும். அதற்கான தனிப் பகுதி அமைத்திருக்கிறோம். உதாரணத்திற்கு ஊருக்கு செல்லும் போது என்னென்ன பொருட்களை உடன் எடுத்து செல்ல வேண்டும் என்று பட்டியலிடுவோம். அதை அவர்கள் கவனமாக பார்த்து நினைவில் கொள்ள வேண்டும். அடுத்து அதிலிருந்து ஒரு பொருளை நீக்கி பட்டியலிடுவோம்.

அதை சரியாக சொல்ல வேண்டும். அதேபோல் குக்கரில் விசில் சத்தம், கோயில் மணி ஓசை இதனை கணக்கிட வேண்டும். சினிமா சார்ந்த விளையாட்டும் இதில் உள்ளது. இது போல் சின்னச் சின்ன பயிற்சிகள் இருக்கும். ஒரு நாளைக்கு ஒரு பயிற்சி. அதை முடித்தால்தான் அடுத்த பயிற்சிக்கு செல்ல முடியும். இதைத் தொடர்ந்து தினமும் செய்தால்தான் அதற்கான பலன் கிடைக்கும்.

கவனச்சிதறல் மற்றும் தூக்கத்திற்கான பயிற்சி மட்டுமில்லாமல் மூச்சுப்பயிற்சி போன்ற மற்ற பயிற்சிகளும் உள்ளன. முழுக்க முழுக்க ஒலி மட்டுமே கொண்டு அமைத்திருப்பதால், காதால் கேட்டு செய்ய வேண்டும். மூச்சுப் பயிற்சியினை செய்யும் போது அதுவே நம்முடைய உடலுக்கு புத்துணர்வை ஏற்படுத்தும். விளையாட்டு என்றாலும் அதன் மூலம் பல விஷயங்களை தெரிந்துகொள்ளலாம்’’ என்றவர், ஒவ்வொரு பகுதியிலும் பல ஆயிரம் செய்திகள் புகுத்தி இருப்பதாக தெரிவித்தார்.

‘‘ஒரு சிலர் கேட்ட கதையையே திரும்பத் திரும்ப கேட்பாங்க. காரணம், அந்தக் கதைக்கும் அவர்களுக்கும் ஒரு கனெக்‌ஷன் இருப்பதாக உணர்வார்கள். அப்படித்தான் ஒவ்வொரு விஷயங்களையும் பார்த்து பார்த்து அமைத்திருக்கிறோம். ஆரம்பத்தில் நானும் சதீஷும் மட்டும் தான் செய்து வந்தோம். பல பகுதிகளை அறிமுகம் செய்ய துவங்கியதும் சவுண்ட் என்ஜினியர், கன்டென்ட் கிரியேட்டர், எடிட்டர் என ஒரு தனிப்பட்ட குழுவினை அமைத்திருக்கிறோம். ஒலி சார்ந்த நிகழ்ச்சி என்பதால் பேசும் வார்த்தைகள் தெளிவாக இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறோம். மேலும், பல சுவாரஸ்யமான பகுதிகளை அமைக்கவும் திட்டமிட்டு வருகிறோம்.

இந்த ஆப்பில் இணைய விரும்புபவர்கள் முதலில் ஆப்பினை பிளே ஸ்டோரில் டவுன்லோட் செய்து சந்தா கட்டணம் செலுத்தினால் தினமும் இதனை கேட்டு மகிழலாம். உங்களுக்குப் பிடித்த விஷயங்களை சுவாரஸ்யமாக கொடுக்க நாங்க ரெடி. தினமும் ஐந்து நிமிடம் கேளுங்கள், கவனம் சிதறாமல் நிம்மதியான தூக்கத்தை பரிசாக பெறுங்கள்” என்றனர் சகோதரர்களான சந்தோஷ், சதீஷ்,

தொகுப்பு: ஷம்ரிதி

 

Related Stories: