நன்றி குங்குமம் தோழி
மதுரை வைகை நதிக்கரையோர தெருவில் அந்தப் பழைய கட்டிடத்தை கடக்கும் போதே நம்முடைய நாசியில் மசாலா வாசனையை உணர முடியும். பாரம்பரிய முறையில் வீட்டுச் சமையலுக்கு பயன்படுத்தக்கூடிய மசாலா பொருட்களை தன் கணவருடன் இணைந்து தயாரித்து வருகிறார் மதுரையை சேர்ந்த சொர்ணலட்சுமி. பல தடைகளை கடந்து இன்று வெற்றிப் பாதையை சுவைத்து வரும் இவர், தான் ெதாழிலில் கடந்து வந்த பாதையினை பற்றி பேசத் துவங்கினார்.
‘‘பிறந்தது திருச்சியில் என்றாலும், திருமணமாகி மதுரையில் செட்டிலாகிட்டேன். மெட்ரோ மசாலா நிறுவனம் துவங்கி 48 வருடமாகிறது. இதனை என் மாமனார் 1978ம் ஆண்டு துவங்கினார். இப்போது நானும் என் கணவர் கார்த்திகேயனும் இணைந்து இதனை நிர்வகித்து வருகிறோம். என் மாமனார் துவங்கிய போது என் கணவர் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார்.
அப்போதிலிருந்தே அப்பாவுடன் சேர்ந்து இவரும் மசாலாப் பொடிகளை தயாரிப்பது மற்றும் விற்பனையில் தன்னை இணைத்துக் கொண்டார். திருமணமான போது முதலில் நான் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தேன். அலுவலகம் நேரம் போக மற்ற நேரத்தில் நானும் என் மாமனார் மற்றும் கணவருக்கு உதவியாக இந்தத் தொழிலில் ஈடுபட ஆரம்பித்தேன். மசாலா தயாரிக்கப்படும் பேக்டரி முதல் அனைத்து நிறுவன நிர்வாக விஷயங்கள் மற்றும் விற்பனை யுக்திகள் அனைத்தையும் கற்றுக் கொண்டேன்.
கொரோனா காலத்திலும் மக்களுக்கு கிடைக்காமல் இருக்கக் கூடாது என்று என் மாமனார் தயாரித்து சப்ளையும் செய்து வந்தார். ஆனால், அவருடைய அந்தக் கடின உழைப்பே அவருக்கு எதிரானது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு காலமானார். இந்த மசாலா பிசினஸ் என் மாமனார் விரும்பிய தொழில். அவர் காட்டிய நேர்மையான வழியினை நானும் என் கணவரும் பின்பற்ற துவங்கினோம். தற்போது நான் நிர்வாக இயக்குனராகவும் என் கணவர் தலைவராகவும் இந்த நிறுவனத்தின் பொறுப்பேற்று செயல்படுத்தி வருகிறோம்’’ என்றவர், இங்கு தயாரிக்கப்படும் பொருட்கள் குறித்து விவரித்தார்.
‘‘நாங்க 16 வகையான மசாலாக்களை தயாரிக்கிறோம். இதில் தனிப்பொடிகளாக மிளகாய், மஞ்சள், மல்லி, சீரகப் பொடிகளை தயாரிக்கிறோம். இவை தவிர சாம்பார் பொடி, வத்தக்குழம்பு பொடி, ரசப்பொடி, இட்லிப்பொடி, கரம் மசாலா, சிக்கன் மசாலா, மட்டன் மசாலா, ஊறுகாய் பொடி, குழம்பு மசாலா என அனைத்து மசாலாப் பொடிகளும் உள்ளது. மேலும், மத்திய அரசிடம் ‘அக்மார்க்’ சான்றிதழும் பெற்றிருக்கிறோம். FSSAI சான்றிதழும் பெற்றிருக்கிறோம். நாங்க எங்களின் பொருட்களுக்கு எந்தவித மார்க்கெட்டிங்கும் செய்ததில்லை. ஒருவர் மூலம் மற்றொருவர் என எங்களுக்கென நிரந்தர வாடிக்கையாளர்கள் உள்ளனர்.
பல பிரபலமான மசாலா தயாரிப்பு நிறுவனங்கள் வந்தாலும், அவற்றின் சவால்களை எதிர்கொண்டு வருகிறோம். அதற்கு முக்கிய காரணம் எங்களின் தரம் மற்றும் சுவை. நாங்க இந்த மசாலாக்களை வீட்டில்தான் தயாரிக்கிறோம். அதனால்தான் இயற்கை சுவையுடன் இருக்கும். நாங்க செயற்கை நிறங்கள் மற்றும் சுவையூட்டிகளை பயன்படுத்துவதில்லை. நூறு சதவிகிதம் மஞ்சள்னா மஞ்சள் மட்டும்தான் இருக்கும். அனைத்து மசாலாக்களும் லேப் டெஸ்டிற்கு போய் அக்மார்க் தர சான்றிதழ் வாங்கிய பிறகுதான் நாங்க பேக்கிங்கே செய்வோம். வீட்டில் தயாரிப்பதால், எந்தவித வயிறு மற்றும் ஜீரண பிரச்னைகளும் ஏற்படாது. மிளகாய் பொடியில் மிதமான காரம் இருப்பதால், குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.
தனிப்பட்ட வாடிக்கையாளர்கள் மட்டுமில்லாமல், சூப்பர் மார்க்கெட், கேட்டரிங் நிறுவனங்கள், பள்ளி மற்றும் கல்லூரியில் செயல்படும் கேண்டீன்களுக்கும் எங்களின் மசாலாப் பொருட்களை நாங்க சப்ளை செய்கிறோம். குறிப்பாக எங்களின் மசாலாக்களை வடஇந்தியர்கள் அதிகமாக விரும்புகிறார்கள். அதில் சிலர் மொத்த விற்பனையாக வாங்கி அவர்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கிறார்கள். நாங்க எந்தவித ப்ரிசர்வேடிவ் சேர்ப்பதில்லை என்பதால், எங்களின் பொருட்களை ஆறு மாதத்திற்குள் பயன்படுத்த வேண்டும். அதனால் ஒரு பேட்ச் விற்பனையானதும் உடனே அடுத்த பேட்ச் மசாலாக்களை ரெடி செய்திடுவோம்.
நாங்க மட்டுமே இந்தப் பிசினஸினை செய்யாமல், எங்கள் மூலம் இல்லத்தரசிகளுக்கும் ஒரு வாய்ப்பினை ஏற்படுத்தி தருகிறோம். நாங்க அவர்களுக்கு மொத்த விலைக்கு கொடுப்போம். அவர்கள் அதை ரீடையில் விலைக்கு விற்பனை செய்வதால், சிறிய அளவில் ஒரு வருமானம் அவர்களுக்கு ஏற்படுத்தி தர முடிகிறது. சமூகவலைத்தளங்கள் மூலமாகவும் எங்களின் பொருட்கள் விற்பனையில் உள்ளது. தனித்தனியாக மட்டுமின்றி காம்போ பேக்களும் விற்பனைக்கு தருகிறோம்.
அதில் பட்ஜெட் பிரெண்ட்லி பேக்கில் ஒரு மாதத்திற்கு தேவையான ஒன்பது வகையான மசாலாக்கள் இருக்கும். அதுவே ஃபேமிலி பேக்கில் 16 வகை மசாலாக்கள் இருக்கும். புளியோதரை, எலுமிச்சை என இன்ஸ்டன்ட் மசாலாவும் உள்ளது. ஊறுகாய் பொடியும் விற்பனை செய்கிறோம். இதனுடன் தக்காளி அல்லது மாங்காய் சேர்த்தால் ஊறுகாய் ரெடி. அதேப்போல் சுடுதண்ணீரில் ரசப்பொடி சேர்த்தால் ரசம் ரெடி. சிலர் இதனை கிஃப்ட் பேக்காகவும் வாங்கிச் செல்கிறார்கள். தற்போது 16 வகை பொடிகளை தயாரிக்கிறோம். எதிர்காலத்தில் மேலும் சில பொடிகளை தயாரிக்கும் எண்ணம் உள்ளது. நிறைய ஸ்டால்கள் அமைத்து விற்பனையினை அதிகரிக்கும் எண்ணம் உள்ளது’’ என்றார் சொர்ணலட்சுமி
தொகுப்பு: விஜயா கண்ணன்
