இருளை வென்ற இசைப் பயணம்!

நன்றி குங்குமம் தோழி

வாழ்க்கையில் சவால்கள் என்பது முட்டுக்கட்டைகள் அல்ல, அவை நாம் பயணிக்கும் பாதையின் திசையை மாற்றும் திருப்புமுனைகள் என்பதை நிரூபித்து வருகிறார் ஜோதி. பிறக்கும் போதே அவருக்கு பார்வைத்திறன் இல்லை என்பதை மருத்துவர்கள் உறுதி செய்தனர். இது அவரது பெற்றோருக்கு ஒரு பெரிய அதிர்ச்சியாக இருந்தாலும், சவால்கள் அத்துடன் முடியவில்லை. வளர்ச்சியில் தாமதம், அறிவுசார் சவால்கள் போன்ற பல இன்னல்களை தன் வாழ்வில் எதிர்கொண்டிருக்கும் ஜோதியின் வாழ்வில் இருளை போக்கும் ஒளியாக அமைந்தது இசை.

மெட்டுகளுக்கும் தாளங்களுக்கும் செவி சாய்க்கும் ஜோதியின் இசை ஆர்வத்தை ஊக்குவித்த அவரின் தாய், இசை பாதையில் அவரை வழிநடத்தி சென்றுள்ளார். அன்றாட வாழ்வின் சவால்களுடன் போராடிய வண்ணம் பல்வேறு நாடுகளுக்குச் சென்று மேடையேறி தன் இசைத் திறமையை வெளிப்படுத்தி மிளிர்கிறார் ஜோதி. இசையில் ஏற்பட்ட ஆர்வம் முதல் உலக மேடை வரை ஜோதியின் இசைப் பயணம் குறித்து நம்முடன் பகிர்கிறார் அவரின் தாய் கலைச்செல்வி.

“ஜோதிக்கு இப்போது 25 வயது. தினமும் பல சவால்களை சந்தித்துக் கொண்டிருக்கும் ஜோதியிடமிருந்து இன்று இசையை பிரிக்க முடியாது. ஆனால், 25 வருடங்களுக்கு முன்பு அவள் பிறந்தபோது குழந்தைக்கு பார்வைத்திறன் இல்லை என்று மருத்துவர்கள் சொல்லிவிட்டனர். அந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள்ளாக அடுத்த சில நாட்களிலேயே குடலில் ஓட்டை விழுந்துள்ளதால் உடனடியாக ஒரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது. அதன் பின்னரும் தலை நிற்பது, பேசுவது, நடப்பது என எல்லா வளர்ச்சியும் தாமதமாகி இப்படியே இரண்டரை ஆண்டுகள் ஆகிவிட்டது.

மருத்துவர்களிடம் சென்றபோது குழந்தைக்கு வளர்ச்சியில் தாமதம், பேச்சுத் திறன் இன்மை மற்றும் அறிவுசார் சவால்கள் (Intellectual Disability/Autism) இருப்பது கண்டறியப்பட்டது. ஜோதியை வளர்ப்பது ஒரு மிகப்பெரிய சவால் என்றும் குறிப்பிட்டனர். இவ்வளவு சவால்களுக்கு மத்தியிலும், ஜோதியிடம் ஒரு தனித்துவம் இருந்தது. அதுதான் ஒலிகள் மீதான அவரது ஈர்ப்பு. ஒரு டம்ளரில் சில்லறையைப் போடும் ஓசை கேட்டால் கூட, அதை அவள் கூர்ந்து கவனிப்பாள். என் அப்பா ஜோதியின் தாத்தா பாரதியார், பாரதிதாசன் பாடல்கள் மற்றும் திருக்குறளை பாடி அவளுக்கு அறிமுகப்படுத்தினார்.

ஜோதி பேசத் தொடங்குவதற்கு முன்பே, அவள் கேட்டு பழகிய ஒலிகளை திரும்பப் பிரதிபலிக்கத் தொடங்கினார். இதுவே அவள் இசை உலகில் தடம் பதிப்பதற்கான முதல் புள்ளியாக அமைந்தது. எத்தனை சவால்கள் இருப்பினும் ஜோதிக்கு கல்வியை கொடுத்துவிடவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்.

ஆரம்பத்தில் வழக்கமான பள்ளியில் என் மகளை சேர்த்தபோது அவளை சமாளிப்பது சற்று கடினமாக இருந்தது. பின்னர், 2006 ஆம் ஆண்டில் ஒரு சிறப்புப் பள்ளியில் சேர்ந்த பிறகு ஜோதியின் நடத்தையில் சில முன்னேற்றம் ஏற்பட்டது. அடுத்தகட்டமாக ஜோதியின் இசை ஆர்வத்தை ஊக்குவிக்க, அடையாறு இசைக் கல்லூரியில் சேர்த்தேன். மிகச் சிறப்பாக வயலின் வாசிப்பாள். எந்தப் பாடல் என்றாலும் சுலபமாக ஸ்வரப்படுத்திவிடும் திறன் அவளிடம் உண்டு. எந்த இசையை கேட்டாலும் அதிலுள்ள இசைக்குறிப்புகளை சொல்லிவிடுவாள்.

‘இசை கலைமணி’ பட்டம் பெற்ற பின்னர் இசை ஆசிரியர் பயிற்சி பட்டயம் படிப்பையும் முடித்து, வயலின் இளங்கலை மற்றும் இசையில் முதுகலை படிப்புகளையும் முடித்தார். மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் சிறப்புத் தேவையுள்ள மாணவர்களுக்கான பிரிவில் முதல் ரேங்க் மற்றும் தங்கப் பதக்கம் பெற்று சாதனை படைத்தார்” என்று தன் மகளின் இசை சாதனைகளை நெகிழ்ச்சியுடன் எடுத்துக் கூறியவர் ஜோதியின் இசை நுணுக்கங்களை ஆராயும் திறன் குறித்தும் பகிர்ந்தார்.

“ஜோதியின் இசை ஞானம் வியக்கத்தக்கது. எத்தகைய ஒலியையும் இசைக் குறிப்புகளாக மாற்றும் திறன் கொண்டவர். கடல் அலையின் ஓசை அல்லது தண்ணீர் கொட்டும் ஓசையைக் கேட்டால் கூட, அதில் என்னென்ன ஸ்வரங்கள் உள்ளன என்பதை ஜோதியால் துல்லியமாகச் சொல்ல முடியும். இசை வல்லுநர்கள் என் மகளை அசாதாரணமான திறமை கொண்டவர் என்றே குறிப்பிடுகின்றனர். இளையராஜாவின் பாடல்கள் என்றால் ஜோதிக்கு அலாதி பிரியம்.

எந்தப் பாடலைக் கேட்டாலும் உடனே அதற்கு ஸ்வரம் அமைக்கும் ‘பிட்ச் பெர்பெக்ட்’ திறன் அவளுக்குண்டு. வயலின், கீபோர்டு மற்றும் யூக்குலேலே போன்ற இசைக்கருவிகளை வாசிக்கும் திறன் உண்டு. ஜோதியின் திறமையை அங்கீகரிக்கும் விதமாக, அவருக்கு இந்தியாவின் குடியரசுத் தலைவரால் விருது வழங்கப்பட்டது. பல சவால்களைத் தாண்டி முன்னேறியதற்காக ‘முன்மாதிரி மாற்றுத்திறனாளி மற்றும் சிறந்த சான்றாளர்’ பிரிவு விருதை பெற்றுள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் மேடையேறி பாடல் பாடி அசத்தியது சமூக வலைத்தளங்களில் பிரபலமாகவே, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் அவர்களின் இசையில் பாடும் வாய்ப்பும் ஜோதிக்கு கிடைத்தது.

இன்று ஜோதி ஒரு இசைக் கலைஞர் மட்டுமல்ல, ஒரு சிறந்த இசை ஆசிரியரும் கூட. ஆன்லைன் மூலம் பெரியவர்களுக்கும், பள்ளிகளில் சிறு குழந்தைகளுக்கும் அவர் இசை கற்பித்து வருகிறார். 1330 திருக்குறள்களையும் வெவ்வேறு ராகங்களில் பாடும் அபாரத் திறமை அவரிடம் உள்ளது. எந்தவொரு இசைக் கலைஞர்களுடன் இசைக் குறித்து அவளால் விவாதிக்க முடியும். ஜோதிக்கு இருக்கக்கூடிய இசைஞானம் அரிதினும் அரிது. பல சவால்களுடன் வாழும் ஜோதிக்கு இசைதான் எல்லாம், இந்த இசைதான் அவளை பண்படுத்தி, மேம்படுத்தி குணப்படுத்தியுள்ளது. அவளுக்குள் ஒரு பொறுமை, அமைதி மற்றும் நிறைவை கொடுத்திருக்கிறது” என்று நெகிழ்ந்தார்.

ஒரு தனிப் பெற்றோராக ஜோதியை வளர்த்தெடுத்த தாயின் விடாமுயற்சியும், இசையின் மீதான ஜோதியின் காதலும் சேர்ந்து, அவரை இன்று ஒரு சுதந்திரமான இசைக் கலைஞராகவும் பலருக்கு முன்மாதிரியாகவும் மாற்றியுள்ளது. இருளையும் அறிவுசார் சவால்களையும் இசையின் மூலம் ஒளியாக மாற்றிய ஜோதியின் பயணம், அனைவருக்கும் ஒரு மிகப்பெரிய உத்வேகம்.

வலுவான ஆளுமையை வெளிப்படுத்துகிறார்!

– பிரதிபா சாரதி, பாடகி, VoxGuru நிறுவனர்

‘‘ஜோதி, கர்நாடக இசையை இயல்பாக புரிந்துகொள்ளும் அபாரத் திறமை வாய்ந்த ஒரு இசைக் கலைஞர். துல்லியமான ஸ்ருதி உணர்வால் ஆசீர்வதிக்கப்பட்டவர். ஸ்வரங்களையும் ராகங்களையும் எளிதாக அடையாளம் காண்கிறார். மேலும், கமகங்களில் அவரது புலமை, ஒவ்வொரு ராகத்தின் தன்மை மற்றும் நுணுக்கங்கள் மீதான ஒரு அரிய உணர்திறனைக் காட்டுகிறது. அவர் மேம்பட்ட இசையமைப்புகளின் ஒரு செழுமையான தொகுப்பை உருவாக்கியுள்ளார்.

மேலும், துல்லியமும் ஒருங்கிணைப்பும் தேவைப்படும் சிக்கலான தாள அமைப்புகள் உட்பட, மெல்லிசை மற்றும் தாளம் இரண்டிலும் வலுவான ஆளுமையை வெளிப்படுத்துகிறார். அவர் மனோதர்மத்தின் படைப்பு அம்சங்களிலும் ஆழமாக ஈடுபட்டு, ராக ஆலாபனம், கற்பன ஸ்வரம் மற்றும் நேரவல் ஆகியவற்றை நம்பகத்தன்மை, கற்பனைத்திறன் மற்றும் வலுவான இசை இலக்கண உணர்வுடன் வழங்குகிறார்.

அவரது இசைத்திறன் கர்நாடக இசையைத் தாண்டி, மெல்லிசையிலும் விரிகிறது; அங்கு அவர் சிந்தனைமிக்க குரலில் ஏற்ற இறக்கங்களையும் வெளிப்பாடுகளையும் கொண்டு வருகிறார். ஆழமான, எதிரொலிக்கும் மற்றும் ஆன்மாவைத் தொடும் குரலுடன், ஜோதியின் இசை தொழில்நுட்ப முதிர்ச்சியையும் உணர்ச்சி ஆழத்தையும் ஒருங்கே கொண்டுள்ளது, இது அவரை உண்மையிலேயே நம்பிக்கைக்குரிய மற்றும் ஈர்க்கக்கூடிய ஒரு கலைஞராக ஆக்குகிறது.

தொகுப்பு: ரம்யா ரங்கநாதன்

Related Stories: