நிலம்+நீதி கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்!

நன்றி குங்குமம் தோழி

1926ல் பிறந்து ஒரு நூற்றாண்டு காலம் இந்திய வரலாற்றை நேரில் பார்த்த ஆளுமை கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்.ஆம்! கிருஷ்ணம்மாள் தன் இளமைக் காலத்தில் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படித்தபோது, அவரோடு தங்கி இருந்த மாணவிகளில் ஒருவர் கூட அவரைத் தொட மாட்டார்களாம். தீண்டாமை என்ற பெயரில் கிருஷ்ணம்மாள் முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறார். எந்தவொரு பொருளையும் அவர் நேரடியாய் தொட முடியாது. இந்த தீண்டாமை மிகப்பெரிய ஒரு உளவியல் காயத்தை அவர் மனதில் நிச்சயம் ஏற்படுத்தியிருக்க வேண்டும்.

இன்றைக்கு 100 வயதைக் கடந்துவிட்ட கிருஷ்ணம்மாள் தன்னிடம் பேச வருபவர்கள், தன்னை பார்க்க வருபவர்களின் கைகளை தன் கைகளால் இறுகப் பற்றிக் கொண்டுதான் பேசுகிறார். கிருஷ்ணம்மாளின் அன்பு முழுமையும் அந்த தொடுதலின் வழியாகவே வெளிப்படுகின்றது.அதாவது, தன் இளமை காலத்தில் யாரெல்லாம் தன்னை தீண்ட மறுத்தார்களோ… இந்த சமூகம் எப்படி தன்னை தொடாமல் தனிமைப்படுத்தியதோ… அந்தச் சமூகத்தை தன் சேவைக் கரங்களால் என் வாழ்நாள் முழுவதும் நான் தொட்டுக் கொண்டே இருப்பேன் என்பதை கிருஷ்ணம்மாள் சொல்லாமல் சொல்கிறார்.

சுதந்திரப் போராட்டம், நில அமைப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு என கிருஷ்ணம்மாளின் பயணம் நீண்டது. எப்படி அவர் இவற்றையெல்லாம் சாத்தியப்படுத்தினார் என்ற கேள்விதான் அவர் வாழ்க்கையின் மையப்புள்ளி. இந்தக் கேள்விக்கு விடையாக “நிலம்+நீதி=கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்” என்ற தலைப்பில் அவரின் வாழ்க்கையை ஆவணப்படுத்தியிருக்கிறார் எழுத்தாளரும், கவிஞரும், இயக்குனருமான ரவிசுப்ரமணியன்.

1926ல் திண்டுக்கல் மாவட்டம், ஐயன்கோட்டை என்கிற சின்ன கிராமத்தில் பிறந்தவர் கிருஷ்ணம்மாள். கிராமங்களில் வறுமையும் சாதிய ஒடுக்குமுறையும் கொடூரமாக இருந்த காலகட்டம் அது. ஒருவேளை சாப்பாட்டுக்கே வழி இல்லாத வறுமை ஒரு பக்கம் என்றால், தண்ணி எடுக்க சென்றால் கூட கிடைக்கின்ற சாதிய வசைகள் இன்னொரு பக்கம் என அவரின் ஆரம்ப கால வாழ்க்கை ஆழமான வலிகளையே அவருக்கு தந்தது. சமூகம் வெளிப்படுத்திய அதிர்ச்சிகளை… புறக்கணிப்புகளை உள்வாங்கியவர், தன் வலியை கோபமாகக் காட்டாமல், ஆக்கப்பூர்வமான சமூக சேவைக்கான எரி பொருளாய் மாற்றினார்.

காந்திய சிந்தனைகள் கற்றுக் கொடுத்த விஷயங்களை, வெறும் சித்தாந்தமாகப் படித்துவிட்டு அவர் சும்மா உட்காரவில்லை. களத்தில் இறங்கினார். காந்தி, நேரு, ஜெயப்பிரகாஷ் நாராயணன்,
காமராஜர் என அந்தக் காலத்தில் இருந்த மிகப்பெரிய தலைவர்களோடு இணைந்து வேலை செய்ய தொடங்கினார்.1950களில் தெலுங்கானா மாதிரியான பகுதிகளில் நிலச்சுவான்தாரர்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்திய கம்யூனிஸ இயக்கப் போராட்டங்கள் தீவிரமடைய, நிலமற்ற விவசாய கூலிகள் கிளர்ந்து எழுந்த நேரம் அது. வன்முறையை தடுத்து, அஹிம்சை வழியில் பொருளாதார
மாற்றத்தைக் கொண்டு வரவே வினோபா பாவே பூமிதான இயக்கத்தை அப்போது தொடங்கி இருந்தார். தன் கணவர் ஜெகந்நாதனோடு இணைந்து, வினோபா பாவேயின் பூமிதான இயக்கம், கிராமதான இயக்கம் போன்றவற்றில் தீவிரமாய் ஈடுபடுகிறார் கிருஷ்ணம்மாள்.

அதாவது, ஊர் ஊரா பல்லாயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் நடக்கத் தொடங்கிய வினோபா பாவேயுடன், கிருஷ்ணம்மாளும் அவரது கணவர் ஜெகந்நாதனும் இணைந்தே நடந்தனர். நிலச்சுவான்தாரர்களைச் சந்தித்து, ‘உனக்கு ஐந்து குழந்தைகள் இருந்தால், இந்தச் சமூகத்தை ஆறாவது குழந்தையாய் நினைத்து, ஆறில் ஒரு பங்கை நிலமற்ற ஏழைகளுக்கு தானமாகக் கொடு’ என கோரிக்கை வைக்கத் தொடங்கினர்.

ஒரு பக்கம் வன்முறை வெடிக்குமோ என்கிற பயம், இன்னொரு பக்கம் அறம் சார்ந்த அழுத்தம் காரணமாக இந்தியா முழுக்க பல லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் தானமாய் பெறப்பட்டு தலித் விவசாயிகளுக்கு பகிர்ந்து வழங்கப்பட்டது. ஆனால், இந்த அறவழி போராட்டம் நிரந்தர தீர்வைத் தரவில்லை. இந்த நிலையில், 1968ல் நிகழ்ந்த கீழ்வெண்மணி சம்பவம் இந்திய நிலவுடமை வரலாற்றில் மாறாத கரும்புள்ளியானது. ஆம், அந்தக் காலகட்டத்தில் தஞ்சை, நாகை மாவட்டங்களில் மிராசுதாரர்களிடம் தலித் மக்கள் கொத்தடிமைகளாய் வேலை செய்தனர். அப்போது, கம்யூனிஸ அமைப்புகளின் துணையோடு, தங்களுக்கு வழங்கப்படும் கூலியில் அரைப்படி நெல் அதிகம் கேட்டு தொழிலாளர்கள் போராட, இதற்காக நடந்த வேலை நிறுத்தத்தில், ஆதிக்க சாதியினர் தலித் தொழிலாளிகள் 44 பேரை குடிசைக்குள் வைத்து கொளுத்த, பெண்களும் குழந்தைகளுமாக தீயில் கருகி இறந்தனர்.

உழைக்கும் மக்களிடம் துண்டு நிலம்கூட இல்லை என்கிற நிலச்சுவான்தாரர்களின் அதிகாரத் திமிரே ஒட்டுமொத்த பலவீனத்துக்கும் காரணம் என்பதை கிருஷ்ணம்மாள் உணர்ந்த தருணம் இதுவே. பூமிதான இயக்கம் மாதிரி யாரோ கருணை காட்டி போடுற பிச்சை அல்ல நிலம். அது உழைக்கிறவனின் அடிப்படை உரிமை. ஏழைகளுக்கு நிலம் கிடைக்காதவரை இந்த மாதிரியான வன்முறைகளை தடுத்து நிறுத்தவே முடியாதென கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் முடிவு செய்ததன் விளைவாக அவர் உருவாக்கியதே லாப்டி (LAFTI) அமைப்பு. அதாவது, வங்கிகள் மூலம் கடன் உதவி பெற்று, நிலங்களை விலைக்கு வாங்கி ஏழைகளுக்கு கொடுப்பதே இதன் நோக்கம்.

நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக ஒடுக்கப்பட்ட சமூகத்தில், அதிலும் குறிப்பாக பெண்களுக்கு எவ்வித பொருளாதார சுதந்திரமும் இல்லாமலே இருந்த நிலையில், நிலமற்ற தலித் பெண்கள் பெயரில் பட்டா வழங்கப்பட வேண்டும் என நினைத்த கிருஷ்ணம்மாள், பெண்களின் பொருளாதார சுயநிலைதான், உண்மையான சமூக மாற்றத்தைக் கொண்டு வரும். குடும்பத்துக்கு நிரந்தர பாதுகாப்பை உருவாக்கும் என்ற தொலைநோக்கு பார்வையினை விதைத்தார். நிலம்+நீதி பெண்ணின் அதிகாரமாய் மாறும் எனவும் யோசித்தார்.

நிலம் கொடுப்பதோடு நிறுத்தாமல், தேவையான வீடுகள், குழந்தைகளுக்கான கல்வி, பெண்களுக்கான தொழில் பயிற்சி எனவும் முழுமையான சமூக மேம்பாட்டு திட்டத்தையும் செய்யத் தொடங்கினார். இந்நிலையில், 1990களில் தாராளமயமாக்கல் மூலம் கடலோர விவசாய நிலங்களை விலைக்கு வாங்கி கடல்நீரை ராட்சத மோட்டார்கள் மூலம் பம்ப் செய்து குட்டைகள் அமைத்து இறால் வளர்க்கத் தொடங்க, அந்தப் பகுதியின் நிலத்தடி நீர் உப்பாய் மாறி, விவசாயம் செய்ய முடியாமல் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் தரிசானது. ஏழை விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழந்து சொந்த ஊரைவிட்டே வெளியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

தனி மனுசியாய் கிருஷ்ணம்மாள் மிகப்பெரிய மக்கள் போராட்டத்தை கட்டி எழுப்பி, உச்சநீதிமன்றம் வரை இந்த வழக்கை கொண்டு செல்ல, விவசாய நிலங்களில் இறால் பண்ணைகளை அமைக்கக் கூடாதென உச்சநீதிமன்றம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது.

எந்தவொரு சமூகப் போராளிக்கும் வெளியில் இருக்கின்ற எதிரிகளைவிட, சொந்த வீட்டுக்குள்தான் எதிர்ப்புகள் அதிகமாக இருக்கும். தன் குடும்பத்தை தியாகம் செய்துவிட்டு போராட வந்தவர்கள் ஒரு பக்கம் எனில், சமூகத்துக்காக போராடியதால் குடும்பத்தாரால் கைவிடப்பட்ட போராளிகள் இன்னொரு பக்கம் இருப்பார்கள். ஆனால், கிருஷ்ணம்மாளின் குடும்பம் எந்த வகையிலும் அவருக்கு தடையாக இல்லாமல் இரும்பு அரணாய் இப்போதும் நிற்கிறது. கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதனின் சமூகப் பணியை பாராட்டி இந்திய அரசின் பத்மஸ்ரீ , பத்மபூஷன் உள்ளிட்ட பல உயரிய விருதுகளும் பல சர்வதேச விருதுகளும் அவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

மகன் கபிலனும்… மகள் பூங்குழலியும்!

கிருஷ்ணம்மாளின் சமூகப் பணியை அவரின் கணவர் ஜெகந்நாதனும், இவர்களின் இரண்டு பிள்ளைகளும் தங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே ஏற்றுக்கொண்டதுடன், வாரிசுகள் இருவருமே திருமணம் செய்து கொள்ளவில்லை. தங்கள் பெற்றோர் இந்த சமூகத்துக்காக செய்த சேவையே தங்களுக்கான வாழ்க்கையின் ரோல்மாடல் என புகழாரம் இல்லாமல் அமைதியாய் வாழ்கிறார்கள்.

மகன் கபிலன் கம்போடியா நாட்டில் மருத்துவ சேவையில் இருக்கிறார். மகள் மருத்துவர் பூங்குழலியும் காந்திகிராமம் அருகிலுள்ள ஊழியரகம் சேவாசிரமத்தில் தன் தாயுடன் தங்கி சமூகப் பணிகளை மேற்கொள்கிறார். நூறு வயதை கடந்த தனது தாயார் கிருஷ்ணம்மாளை கண்ணும் கருத்துமாய் கவனித்தும் வருகிறார்.

கவிஞர் ரவிசுப்ரமணியன்…

எழுத்தாளரும், கவிஞரும், ஆவணப்பட இயக்குநருமான ரவிசுப்ரமணியன் 9 ஆண்டுகளாய் பல்வேறு முன்னணி தொலைக்காட்சிகளில் பணியாற்றி, நூற்றுக்கணக்கான ஆவணப்படங்களை உருவாக்கிய அனுபவம் உள்ளவர். இவரது கவிதைகள் கூர்மையான சமூகப் பார்வையும், மென்மையான உணர்வுகளும் நிறைந்தவை. நவீன ஓவியம் மற்றும் இசையிலும் ஆழ்ந்த ஈடுபாடுடையவர். தமிழ்நாட்டின் கலை மற்றும் இலக்கிய ஆளுமைகள் குறித்து பல அரிய ஆவணப்படங்களை இயக்கியுள்ளார். பல்வேறு சவால்களுக்கு மத்தியில், கொரோனா பெருந்தொற்று காலத்தின் நெருக்கடிகளை தாண்டி கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதனின் ஆவணப்படத்தையும் எடுத்திருக்கிறார்.

தொகுப்பு: மகேஸ்வரி நாகராஜன்

Related Stories: