உலகக் கோப்பை கால்பந்து; அரை டஜன் கோல்; கத்தாரை மிரட்டிய கனடா!

 

வான்கூவர்: உலக கோப்பை கால்பந்து போட்டித் தொடரின் பி பிரிவு லீக் ஆட்டத்தில், கத்தார் அணியுடன் மோதிய கனடா 6-0 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்றது. வான்கூவரில் நடந்த இப்போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய கனடா அணி வீர்கள் அடுத்தடுத்து கோல் போட்டு கத்தாரை கலங்கடித்தனர். லாரின் (16வது நிமிடம்), ஜொனாதன் டேவிட் (29’ மற்றும் 45+3’) அடித்த கோல்களால் கனடா அணி இடைவேளையின்போது 3-0 என முன்னிலை வகித்தது.

தொடர்ந்து 2வது பாதியிலும் பந்தை துல்லியமாகக் கடத்திச் சென்று அலை அலையாய் தாக்குதல் நடத்திய கனடா அணிக்கு சலிபா 64வது நிமிடத்தில் கோல் போட, அந்த அணி 4-0 என முன்னிலையை அதிகரித்தது. முகமது மனாய் (75வது நிமிடம்) ஓன் கோல் போட கத்தாரின் கதி அதோகதி ஆனது. முத்தாய்ப்பாக டேவிட் கடைசி தருணத்தில் (90+2’) ஹாட்ரிக் கோல் போட்டு அசத்த, ஆட்ட நேர முடிவில் கனடா அணி 6-0 என அமர்க்களமாக வென்றது.

வீரர்கள் மோதல்
இந்த போட்டியின்போது முரட்டுத் தனமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதற்காக கத்தாரின் அஸிம் மடிபோ, ஹோமம் அகமதுவுக்கு சிவப்பு அட்டை காட்டி வெளியேற்றப்பட, அந்த அணி 9 வீரர்களுடன் விளையாட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மடிபோ இடித்துத் தள்ளியதில் படுகாயம் அடைந்த கனடா வீரர் இஸ்மாயில் கோன் களத்தில் இருந்து சிகிச்சைக்காக ஸ்டிரெச்சரில் கொண்டு செல்லப்பட்டார். போட்டி முடிந்ததும் கனடா-கத்தார் வீரர்கள் களத்திலேயே கடுமையாக வாக்குவாதம் செய்து சரமாரியாக தாக்குதலில் ஈடுபட்டதால் கலவர சூழல் நிலவியது.

போஸ்னியாவை போட்டுத் தாக்கிய சுவிஸ்
பி பிரிவு லீக் ஆட்டத்தில் போஸ்னியா ஹெர்ஸகோவினாவை எதிர்கொண்ட சுவிட்சர்லாந்து அணி 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றியை வசப்படுத்தி அசத்தியது. அந்த அணியின் சார்பில் ஜோகன் மன்ஸாம்பி (74வது மற்றும் 90வது நிமிடம்), ரூபன் வெர்காஸ் (84’), கிரானிட் ஸாகா (90+7’) கோல் போட்டனர். போஸ்னியா தரப்பில் எர்மின் (90+3’) ஆறுதல் கோல் அடித்தார். பி பிரிவில் கனடா (4), சுவிஸ் (4) முதல் 2 இடத்திலும், போஸ்னியா , கத்தார் தலா 1 புள்ளியுடன் அடுத்த இடங்களிலும் உள்ளன.

மெக்சிகோவுக்கு முதல் மரியாதை! கால்பந்து உலக கோப்பை 2026 தொடரின் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்ற முதல் அணி என்ற பெருமையை மெக்சிகோ தட்டிச் சென்றது. ஏ பிரிவு லீக் ஆட்டத்தில் தென் கொரியாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய மெக்சிகோ, தொடர்ச்சியாக 2வது வெற்றியுடன் 6 புள்ளிகள் பெற்று நாக் அவுட் சுற்று வாய்ப்பை உறுதி செய்தது.

வைரலான மெர்லின் வாத்து
மெக்சிகோ அணியின் பச்சை சீருடை அணிந்து நகர்வலம் வந்த மெர்லின் என்ற வாத்து அந்நாட்டு ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. அதன் வாத்து நடை! வைரலான நிலையில் மெக்சிகோ சிட்டியின் தூதர் மெர்லின் என ஃபிபா வர்ணித்துள்ளதுடன், குவாதலஜாரா ஸ்டேடியத்தின் மேலாக மெர்லினின் படம் பறக்கவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories: