கத்தாரை 6-0 என பந்தாடி கனடா வரலாற்று வெற்றி: ஜொனாதன் டேவிட் ஹாட்ரிக் கோல் அடித்தார்

வான்கூவர்: 2026 உலககோப்பை கால்பந்து தொடரில் அமெரிக்காவின் வான்கூவர் மைதானத்தில் நடைபெற்ற குரூப் பி பிரிவு ஆட்டத்தில் கனடா மற்றும் கத்தார் அணிகள் மோதின. இதற்கு முன்பு விளையாடிய 8 உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றி கூட பெறாத கனடா அணி வெற்றி பெறும் முனைப்பில் களம் கண்டது. மேலும் நட்சத்திர வீரர் அல்போன்சோ டேவிஸ் இல்லாதது கனடா அணிக்கு பின்னடைவாக அமைந்தாலும் அந்த அணி உத்வேகத்துடனேயே விளையாடினர்.

போட்டி தொடங்கி 16வது நிமிடத்தில் கனடாவின் கைல் லாரின் முதல் கோல் அடித்து அசத்தினார். தொடர்ந்து ஜொனாதன் டேவிட் ஆக்ரோஷமாக ஆடி உலகக் கோப்பை வரலாற்றில் தனது முதல் ஹாட்ரிக் கோல் அடித்து சாதனை படைத்தார். தொடர்ந்து 64வது நிமிடத்தில் நாதன் சலிபா, கத்தார் டிபெண்டர் முகமது மனாயின் சேம் சைடு கோல் மற்றும் ஜொனாதன் டேவிட்டின் கடைசி நேர கோல் என 6-0 என்ற கணக்கில் கனடா அணி உலககோப்பையில் தனது முதல் வெற்றியை ருசித்தது.

இதனிடையே கனடா அணியின் நட்சத்திர மிட்பீல்டர் இஸ்மாயில் கோனேவை, கத்தார் வீரர் மாடிபோ பின்னால் இருந்து முரட்டுத்தனமாக தாக்கியதில் காயமடைந்த கோனே மைதானத்திலேயே விழுந்து துடித்தார். இதையடுத்து அவர் ஸ்ட்ரெச்சர் மூலம் மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். முரட்டுத்தனமாக விளையாடிய மாடிபோவுக்கு நடுவர் ரெட் கார்டு வழங்கினார். காயமடைந்த கோனே எஞ்சிய உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடுவது கடினம் எனத் தெரிகிறது.

இந்த வெற்றியின் மூலம் குரூப் பி பிரிவில் கனடா 3 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. வரும் ஜூன் 24 அன்று நடைபெறும் அடுத்த லீக் போட்டியில் கனடா அணி சுவிட்சர்லாந்தையும், கத்தார் அணி போஸ்னியாவையும் எதிர்கொள்கின்றன.

Related Stories: