முத்தரப்பு ஒருநாள் தொடர்; பைனலில் இலங்கை-ஏ: இந்தியா-ஏ அணியுடன் நாளை மோதல்

 

தம்புல்லா: முத்தரப்பு ஒருநாள் தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான்-ஏ அணியை 103 ரன் வித்தியாசத்தில் வீழ்த்திய இலங்கை-ஏ அணி, இறுதிப் போட்டியில் நாளை இந்தியா-ஏ அணியின் சவாலை சந்திக்கிறது. ரங்கிரி சர்வதேச ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற ஆப்கான்-ஏ அணி முதலில் பந்துவீசியது. தொடக்க வீரர்களின் அதிரடி ஆட்டத்தால் இலங்கை-ஏ அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 322 ரன் குவித்தது. அவிஷ்கா பெர்னாண்டோ 110 ரன் (97 பந்து, 13 பவுண்டரி, 1 சிக்சர்), நிரோஷன் டிக்வெல்லா 66 ரன் (54 பந்து, 12 பவுண்டரி), நுவனிந்து 45, ரவிந்து 25, வனுஜா சஹான் 19 ரன் எடுத்தனர்.

ஆப்கான்-ஏ பந்துவீச்சில் பரிதூன் தாவுத்ஸாய் 4, பர்மானுல்லா 3, முகமது இப்ராகிம் 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய ஆப்கான்ஏ அணி 42.5 ஓவரில் 219 ரன் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. தொடக்க வீரர் ஹஸன் இசக்கில் 74 ரன் (78 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்சர்), பஹிர் ஷா 35, பர்மானுல்லா 43, இஜாஸ் அகமது 19 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் பெவிலியன் திரும்பினர். இலங்கை-ஏ பந்துவீச்சில் துலஜ் சமுதிதா 6.5 ஓவரில் 25 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட் கைப்பற்றினார்.

குகதாஸ் மதுளன் 3, ரவிந்து, வியாஸ்காந்த் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அவிஷ்கா ஆட்ட நாயகன் விருது பெற்றார். 103 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற இலங்கை-ஏ அணி 6 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து பைனலுக்கு தகுதி பெற்றது. ஆப்கான்-ஏ அணி (2 புள்ளி) வெளியேறிய நிலையில் இந்தியா-ஏ (4 புள்ளி) இலங்கை-ஏ அணிகள் தம்புல்லாவில் நாளை நடைபெற உள்ள பைனலில் பலப்பரீட்சை நடத்துகின்றன.

Related Stories: