இஸ்தான்புல்: துருக்கியின் பிரபல நடிகை எஸே இர்டெம் தனது 35வது பிறந்தநாளைக் கொண்டாடிய அடுத்த தினமே திடீர் மாரடைப்பால் காலமானார். துருக்கியின் ‘கிரான்பெர்ரி சோர்பெட்’ என்ற புகழ்பெற்ற டிவி நாடகத் தொடரில் இஷில் துர்கான் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றவர் எஸே இர்டெம் (35). சின்னத்திரையில் வளர்ந்து வரும் நட்சத்திரமாகத் திகழ்ந்த இவர், சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக இருந்து வந்தார்.
இந்நிலையில், தனது 35வது பிறந்தநாளைத் தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் உற்சாகமாகக் கொண்டாடி மகிழ்ந்தார். பிறந்தநாள் கொண்டாட்டங்கள் முடிந்த ஒரே நாளில், அவரது வீட்டில் இருந்தபோது எஸே இர்டெமிற்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதற்குள் அவர் உயிரிழந்தார். அவருக்குத் திடீர் மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், அவரது மரணத்திற்கான சரியான காரணம் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை. இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தற்போது அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே மரணத்திற்கான முழுமையான காரணங்கள் தெரியவரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
