சென்னை: கடந்த 2 வாரத்தில் 15,710 மெட்ரிக் டன் கட்டிடம் மற்றும் இடிபாட்டுக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை:
சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் சாலைகள், தெருக்கள், மக்கள் குடியிருப்புப் பகுதிகள், பாலங்கள், பேருந்து நிறுத்தங்கள், மயான பூமிகள் உள்ளிட்ட பொது இடங்களில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளுதல் உள்ளிட்ட திடக்கழிவு மேலாண்மைப் பணிகள் நடந்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, சென்னை மாநகராட்சி பகுதிகளில் கட்டிடம் மற்றும் இடிபாட்டுக் கழிவுகள் அகற்றும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சிப் பகுதிகளில், கட்டிடம் மற்றும் இடிபாட்டுக் கழிவு மேலாண்மைக்கான வழிகாட்டுதல்களின்படி, ஒரு மெட்ரிக் டன்னுக்கு குறைவான கட்டிட மற்றும் இடிபாட்டுக் கழிவுகளை பெருநகர சென்னை மாநகராட்சி இலவசமாக அகற்றி வருகிறது.
இந்த இடிபாட்டுக் கழிவுகளை பொது இடங்களில் கொட்டுவதை அப்புறப்படுத்தவும், சுற்றுச்சூழல் மாசுபாட்டை தவிர்க்கும் நோக்கிலும், கட்டிடம் மற்றும் இடிபாட்டுக் கழிவுகளை அகற்றுவதற்காக சிறப்பு வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, கழிவுகள் கொட்டப்படும் இடங்களை கண்காணித்தல், அவற்றை அகற்றுதல் மற்றும் முறையான செயலாக்க நிலையங்களுக்கு அனுப்பி மறுசுழற்சி பயன்பாட்டிற்கு கொண்டு வருதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒரு மெட்ரிக் டன்னுக்கு மேல் கட்டிட மற்றும் இடிபாட்டுக் கழிவுகளை உருவாக்குபவர்கள், தாங்கள் உருவாக்கிய கழிவுகளை தங்களது வாகனங்களைப் பயன்படுத்தி கொடுங்கையூர் அல்லது பெருங்குடியில் செயல்பட்டு வரும் கட்டிட மற்றும் இடிபாட்டுக் கழிவு செயலாக்க மையங்களுக்கு கொண்டு சென்று, கழிவுகளை பதப்படுத்தும் பணிகளுக்காக மெட்ரிக் டன் ஒன்றுக்கு ரூ.800 செயலாக்கக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
இத்திட்டம் செயல்படுத்தப்பட்ட பிறகு, பொதுமக்கள் மற்றும் கட்டிட நிர்மாணிப்பாளர்களிடமிருந்து மொத்தம் 321.39 மெட்ரிக் டன் கட்டிட மற்றும் இடிபாட்டுக் கழிவுகள் (C&D Waste) பெறப்பட்டு, கட்டிட மற்றும் இடிபாட்டுக் கழிவு செயலாக்க மையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. மேலும், கட்டிட மற்றும் இடிபாட்டுக் கழிவு செயலாக்கத்திற்காக பொதுமக்கள் மற்றும் கட்டிட நிர்மாணிப்பாளர்களிடமிருந்து ரூ.2,57,112/ வசூலிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி பகுதிகளில் 27.5.2026 முதல் 9.6.2026 வரை சுமார் 15,710 மெட்ரிக் டன் கட்டிடம் மற்றும் இடிபாட்டுக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன. மேலும், பொது இடங்கள் மற்றும் நீர்நிலைகளில் அனுமதியின்றி கட்டிடம் மற்றும் இடிபாட்டுக் கழிவுகளை கொட்டிய 338 விதிமீறலாளர்களிடமிருந்து ரூ.16.08 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் கட்டிடம் மற்றும் இடிபாட்டுக் கழிவுகள் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை பெருநகர சென்னை மாநகராட்சியின் (https://chennaicorporation.gov.in/gcc/CandD_Waste_Management/) இணையதளத்திலும், மாநகராட்சியின் 1913 என்ற உதவி எண்ணிலும் தொடர்பு கொண்டும் விவரங்களை தெரிந்து கொள்ளலாம். மாநகராட்சியின் சார்பில் மேற்கொள்ளப்படும் இதுபோன்ற நடவடிக்கை நீர்நிலைகள் பாதுகாப்பு, காற்று மாசுபாடு குறைப்பு மற்றும் நகர சுத்தம் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
