திமுக ஆட்சியில் வழங்கியதை கொண்டுவர வைத்து அலைக்கழிப்பு; 3 சக்கர வாகனங்களுக்கு தவெக அரசின் ஸ்டிக்கர் ஒட்டி மீண்டும் வழங்கிய அமைச்சர்: இதுதான் மாற்றமா? என மாற்றுத்திறனாளிகள் கேள்வி

வேலூர்: வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் அரசின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. கலெக்டர் லீலா அலக்ஸ் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் விஜய் பாலாஜி கலந்து கொண்டு, மாற்றுத்திறனாளர்களுக்கு மூன்று சக்கர மோட்டார் வாகனங்களை வழங்கினார். இந்த வாகனங்கள் கடந்த 4 மாதங்களுக்கு முன்னரே திமுக ஆட்சியில் ஒதுக்கீடு செய்யப்பட்டது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்ட நலத்திட்ட உதவிகளை அதிகாரிகள் வழங்கியதாக தெரிகிறது. அதனை மாற்றுத்திறனாளிகள் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், வேலூர் மாவட்டத்திற்கு அமைச்சர் வருகிறார் என்பதற்காக, ஏற்கனவே ஒதுக்கீடு செய்து வழங்கப்பட்ட மூன்று சக்கர வாகனங்களை பெற்ற பயனாளிகளை, மீண்டும் கலெக்டர் அலுவலகத்திற்கு அழைத்து வந்து புதிய பயனாளிகளுக்கு வழங்கியதை போல், தவெக அரசின் ஸ்டிக்கரை ஒட்டி வழங்கினர். அதனை பெற்ற மாற்றுத்திறனாளிகள் 4 மாதங்களுக்கு முன்னரே வாகனம் வழங்கி விட்டதாகவும் தற்போது அழைத்து அலைக்கழிப்பதாகவும் அதிருப்தியை வெளிப்படுத்தினர். தவெக ஆட்சியில் ஏற்படுத்தப்பட்ட மாற்றம் இதுதானா? எனவும் கேள்வி எழுப்பினர். இதுபற்றி அமைச்சர் விஜய் பாலாஜியிடம் நிருபர்கள் கேட்டதற்கு ‘இப்போது நீங்கள் சொல்லி இருக்கிறீர்கள், அது குறித்து விசாரிக்கிறேன். அப்படி ஏதாவது இருந்தால் நடவடிக்கை எடுக்க சொல்கிறேன்’ என்றார்.

Related Stories: