பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையின மாணவர்கள் விடுதிகளில் தங்கி பயில விண்ணப்பிக்கலாம்: ஜூலை 15ம் தேதி கடைசி நாள்

சென்னை: பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையின மாணவர்கள் விடுதிகளில் தங்கி பயில விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசால் சென்னை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் மாணவர் மற்றும் மாணவியர்களுக்கென 12 அரசு கல்லூரி மாணவர் விடுதி மற்றும் 6 அரசு கல்லூரி மாணவியர் விடுதிகள் ஆக மொத்தம் 18 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் படிப்புகளில் பயிலும் மாணவ-மாணவியர் சேர தகுதியுடையவர்கள் ஆவர்.

விடுதிகளில் சேரும் மாணவர்களின் பெற்றோர், பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.2,00,000க்கு மிகாமல் இருக்க வேண்டும். இருப்பிடத்திலிருந்து பயிலும் கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்தபட்சம் 8 கி.மீ.,க்கு மேல் இருக்க வேண்டும். இந்த தூர விதி மாணவியருக்கு பொருந்தாது. தகுதியுடைய மாணவ-மாணவியர் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதிகாப்பாளர், காப்பாளினிகளிடமிருந்தோ அல்லது மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்படோர் நல அலுவலகத்திலிருந்தோ இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட விடுதிகாப்பாளர், காப்பாளினிகள் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தில் அடுத்த மாதம் 15ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மாணவ-மாணவியர்கள் விண்ணப்பிக்கும் பொழுது சாதி மற்றும் பெற்றோரது ஆண்டு வருமானம் குறித்த சான்றிதழ்கள் ஏதும் அளிக்க தேவையில்லை. விடுதியில் சேரும்போது மட்டும் சான்றிதழ்களை அளித்தால் போதுமானது. தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு விடுதியிலும் முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களின் குழந்தைகளுக்கென தனியே 5 இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. எனவே கல்லூரி மாணவ-மாணவியர்கள் அரசின் இச்சலுகைகளை பெற்று பயனடையலாம் என்று சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அறிவித்துள்ளது.

Related Stories: