தனியார் ரிசார்ட்டில் சாப்பிட்ட கல்லூரி மாணவிகள் 20 பேருக்கு திடீர் வாந்தி, மயக்கம்: 12 பேர் அட்மிட்

ஊட்டி: ஊட்டி அருகே எமரால்டு இத்தலார் பகுதியில் உள்ள ஒரு தனியார் ரிசார்ட்டில் தங்கி இருந்த 20க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளுக்கு திடீர் வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் மயக்கம் ஏற்பட்டு ஊட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டத்திற்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இவர்கள் இங்குள்ள தனியார் ரிசார்ட் மற்றும் காட்டேஜ்களில் தங்கி செல்கின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் கர்நாடக மாநிலம் மங்களூர் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியைச் சேர்ந்த 60க்கும் மேற்பட்ட மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் ஊட்டிக்கு வந்தனர்.இவர்கள் ஊட்டி அருகே உள்ள எமரால்டு இத்தலார் பகுதியில் உள்ள ஒரு தனியார் ரிசார்ட்டில் தங்கி உள்ளனர். நேற்று முன்தினம் இரவு உணவு சாப்பிட்டனர். இதனை உட்கொண்ட அவர்களுக்கு நேற்று காலை முதல் வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் மயக்கம் ஏற்பட்டது.

உடனடியாக அவர்கள் இத்தலார் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றனர். அப்போது, 20க்கும் மேற்பட்டவர் ஒரே சமயத்தில் திடீர் வாந்தி, மயக்கம் என்று மருத்துவமனைக்கு வந்தவுடன், அதிர்ச்சியடைந்த சுகாதார நிலைய அதிகாரிகள் உடனடியாக உணவுத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இது குறித்து புகார்கள் சென்றவுடன் உணவுத்துறை அதிகாரிகளும் சம்பந்தப்பட்ட ரிசார்ட்டிற்கு சென்று உணவு பொருட்களை பரிசோதித்தனர். மேலும், விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

இதனைத்தொடர்ந்து முதலுதவி சிகிச்சைக்கு பின் பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக ஊட்டி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு செல்லுமாறு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் தெரிவித்தனர்.நேற்று பிற்பகலுக்கு மேல் சிலருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் தலைச்சுற்றல் தொடர்ந்து இருந்த நிலையில் உடனடியாக அவர்கள் ஊட்டியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். 20க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைக்குச் சென்ற நிலையில், அவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதில் சேதனா (22), குஷி (22), பர்சானா (23), சாண்ட்ரா (23), அஹராபி (20), நெவா (23), ஆஷிப் (23), ஹிமா (22), சினேகா (22), கார்த்திகா (23), திவ்யா (22), அபினாவ் (24) உள்ளிட்ட 12 பேருக்கு தொடர்ந்து வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் தலைச்சுற்றல் இருக்கும் நிலையில் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து போலீசார் தனியார் ரிசார்ட் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: