தாம்பரம் எக்ஸ்பிரஸ் ரயில் இன்ஜினில் திடீர் கோளாறு: நீடாமங்கலத்தில் நிறுத்தி வைப்பு: பயணிகள் அவதி

திருவாரூர்: தாம்பரம்-போடிநாயக்கனூர் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று அதிகாலை நீடாமங்கலம் வந்த திடீரென இன்ஜினில் கோளாறு ஏற்பட்டதால் நீடாமங்கலத்தில் 2 மணி நிறுத்தப்பட்டது. இதனால் அதிலிருந்த 500க்கும் மேற்பட்ட பயணிகள் அவதிக்குள்ளாகினர். திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ரயில் நிலையம் வழியாக கோவை- மன்னார்குடி எக்ஸ்பிரஸ் ரயில், சென்னை- மன்னார்குடி ரயில், எர்ணாகுளம்- காரைக்கால் ரயில், மன்னார்குடி- திருப்பதி ரயில், ஜோத்பூர்- மன்னார்குடி ரயில், கோவா- வேளாங்கண்ணி ரயில்கள் சென்று வருகிறது.

அதேபோல் திருச்சியில் இருந்து வேளாங்கண்ணி, காரைக்கால், மன்னார்குடி செல்லும் ரயில்கள் நீடாமங்கலம் வழியாக செல்கிறது.
இதேபோல் சென்னை தாம்பரத்தில் இரவு 10.30 மணிக்கு புறப்படும் போடிநாயக்கனூர் எக்ஸ்பிரஸ் ரயில், மயிலாடுதுறை, திருவாரூர் வழியாக நீடாமங்கலத்தில் நிற்காமல் தஞ்சை வழியாக போடிநாயக்கனூர் சென்று வருகிறது. வழக்கம்போல் தாம்பரம்- போடிநாயக்கனூர் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்றிரவு 10.30 மணிக்கு தாம்பரத்திலிருந்து புறப்பட்டது.

இன்று அதிகாலை 4.48 மணியளவில் நீடாமங்கலம் வந்தது. அப்போது ரயில் இன்ஜினில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக நீடாமங்கலம் ரயில் நிலையத்தில் அந்த ரயில் நிறுத்தப்பட்டது. பின்னர் தஞ்சையில் இருந்து ரயில்வே தொழில்நுட்ப வல்லுனர்கள் வரவழைக்கப்பட்டு கோளாறு சரிசெய்யப்பட்டது. பின்னர் இந்த ரயில் காலை 6.35 மணியளவில் புறப்பட்டு சென்றது. இதனால் 2 மணி நேரம் ரயில் நின்றதால் அதிலிருந்த 500க்கும் மேற்பட்ட பயணிகள் அவதிக்குள்ளாகினர். இதன் காரணமாக கோவையில் இருந்து நீடாமங்கலம் வழியாக மன்னார்குடி செல்லும் செம்மொழி எக்ஸ்பிரஸ் ரயில் ஒரு மணி நேரம் தாமதமாக வந்தது.

Related Stories: