நைஸ்: ஐரோப்பிய நாடுகளுக்கு 5 நாள் பயணமாக சென்றுள்ள பிரதமர் மோடிக்கு பிரான்சில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் மோடி, பிரான்ஸ் மற்றும் ஸ்லோவாக்கியா நாடுகளுக்கு 5 நாள் அரசுமுறை பயணமாக நேற்று பிரான்ஸ் நாட்டின் நைஸ் நகருக்கு சென்றடைந்தார். அங்கு அவருக்கு பிரான்ஸ் நாட்டு அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். முன்னதாக, 1993ம் ஆண்டில் ஸ்லோவாக்கியா சுதந்திரம் பெற்ற பிறகு, இந்திய பிரதமர் ஒருவர் அந்நாட்டிற்கு செல்வது இதுவே முதல் முறையாகும். இந்த முக்கியத்துவம் வாய்ந்த பயணத்தின் போது, ஸ்லோவாக்கியா பிரதமர் ராபர்ட் ஃபிகோ மற்றும் அதிபர் பீட்டர் பெல்லெக்ரினி ஆகியோரை சந்தித்து வர்த்தகம், முதலீடு, ஆட்டோமொபைல் உற்பத்தி மற்றும் ரயில்வே உள்கட்டமைப்பு ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து பிரதமர் மோடி ஆலோசிக்கிறார்.
பிரான்ஸ் பயணத்தின் ஒரு பகுதியாக, அதிபர் இம்மானுவேல் மேக்ரானுடன் பிரதமர் மோடி உயர்மட்ட பேச்சுவார்த்தை நடத்துகிறார். இரு நாடுகளுக்கும் இடையிலான ‘சிறப்பு உலகளாவிய வியூகம்’ கூட்டாண்மையை மறுஆய்வு செய்யும் இரு தலைவர்களும், 2026ம் ஆண்டை ‘கண்டுபிடிப்புகளின் ஆண்டு’ என கொண்டாட முடிவு செய்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக, ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கான ‘பாரத் இன்னோவேட்ஸ்’ நிகழ்ச்சியை மேக்ரானுடன் இணைந்து மோடி தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து, எவியன் நகரில் வரும் 16ம் மற்றும் 17ம் தேதிகளில் நடைபெறும் ஜி7 உச்சி மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பிரதமர் மோடி பங்கேற்கிறார். அங்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்களுடன் சர்வதேச ஒத்துழைப்பு, பொருளாதார வளர்ச்சி மற்றும் செயற்கை நுண்ணறிவு குறித்து கருத்துகளை பகிர்ந்து கொள்கிறார்.
இந்த பயணத்தின் இறுதி கட்டமாக வரும் 18ம் தேதியன்று பாரிஸ் செல்லும் பிரதமர் மோடி, ஐரோப்பாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப விழாவான ‘விவாடெக்’ மாநாட்டில் கலந்து கொள்கிறார். இம்மாநாட்டில் இந்தியா சார்பில் மிகப்பெரிய அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுதவிர, பிரான்சில் வசிக்கும் சுமார் 1,19,000 இந்திய வம்சாவளியினரிடையே அவர் உரையாற்றுகிறார். இப்பயணம் குறித்து ஸ்லோவாக்கியாவுக்கான இந்திய தூதர் அபூர்வா வாஸ்தவா கூறுகையில், ‘இந்த பயணம் வெறும் அரசியல் உறவு மட்டுமல்லாமல், பொருளாதார பாதுகாப்பு மற்றும் மக்கள் இடையிலான தொடர்பை வலுப்படுத்தும்’ என்று தெரிவித்தார். ஸ்லோவாக்கிய அதிபர் பீட்டர் பெல்லெக்ரினி தனது எக்ஸ் தளத்தில், ‘பிரதமர் மோடியை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன், இந்த சந்திப்பு புதிய வாய்ப்புகளை உருவாக்கும்’ என்று பதிவிட்டுள்ளார்.
