புதுடெல்லி: அமெரிக்காவின் சுயமாக முன்னேறிய பணக்காரப் பெண்களின் 11வது ஆண்டு தர வரிசைப் பட்டியலை போர்ப்ஸ் வெளியிட்டுள்ளது. அதில் இந்திய வம்சாவளி ஜெயஸ்ரீ உல்லால் 7ம் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார். இந்திய வம்சாவளியான ஜெயஸ்ரீ உல்லால் கடந்த 1961ம் ஆண்டு லண்டனில் பிறந்தார். தனது பள்ளிப்படிப்பை டெல்லியில் முடித்துள்ளார். சான் பிரான்சிஸ்கோ ஸ்டேட் பல்கலைக்கழகத்தில் பி.எஸ் எலெக்ட்ரிக்கல் இன்ஜினீயரிங் படிப்பை முடித்துள்ளார்.
2008ம் ஆண்டு அரிஸ்டா பிசினஸ் மற்றும் கிளவுட் நெட்வொர்க்கிங் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக(சிஇஓ) பொறுப்பேற்றார். இந்நிலையில் ஜெயஸ்ரீ, 2026 ம் ஆண்டுக்கான போர்ப்ஸ் பத்திரிகையின் சுயமாக முன்னேறிய பணக்கார பெண்கள்’ பட்டியலில் ஏழாவது இடத்தையும், இந்திய வம்சாவளி பெண்களில் முதல் இடத்தையும் பிடித்துள்ளார். போர்ப்ஸ் அவரது நிகர சொத்து மதிப்பு 6.8 பில்லியன் டாலர் ( சுமார் ரூ.64,000 கோடி) என மதிப்பிட்டுள்ளது. இது அவரை மிகவும் செல்வாக்கு மிக்க நபர்களில் ஒருவராக நிலைநிறுத்துகிறது.
