அரச குடும்பத்தின் சொத்தை கேட்டு பிரச்னை செய்ததால் கணவரின் 2வது மனைவியை துப்பாக்கியால் சுட்ட முதல் மனைவி: பாஜக எம்எல்ஏ உறவினர் குடும்பத்தில் பரபரப்பு

 

சத்னா: நாகோட் அரச குடும்பத்தில் முதல் மனைவி தனது கணவரின் இரண்டாவது மனைவியை கோட்டைக்குள் வைத்து சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேசம் மாநிலம் சத்னா மாவட்டத்தில் உள்ள நாகோட் அரச குடும்பத்தைச் சேர்ந்த ரூபேந்திர சிங் என்கிற பாபா ராஜா, பாஜக எம்எல்ஏ நாகேந்திர சிங்கின் மருமகன் ஆவார். ரூபேந்திர சிங்கிற்கு சுனிதா சிங் என்ற முதல் மனைவியும், யோகிதா சிங் என்ற இரண்டாவது மனைவியும் உள்ளனர். இவர்களுக்கு இடையே நீண்டகாலமாக குடும்ப மற்றும் சொத்து பிரச்னை இருந்து வந்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்த, கடந்த 2 நாட்களுக்கு முன்பு யோகிதா சிங் தனது உறவினர்களுடன் வரலாற்றுச் சிறப்புமிக்க பர்சமானியா அரண்மனைக்கு வந்திருந்தார். இந்நிலையில், நேற்று மதியம் கோட்டைக்குள் இரு தரப்பினருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த முதல் மனைவி சுனிதா சிங், தான் வைத்திருந்த உரிமம் பெற்ற துப்பாக்கியை எடுத்து யோகிதா சிங்கை நோக்கிச் சுட்டார். இதில் யோகிதாவின் வயிற்றுப் பகுதியில் குண்டு பாய்ந்து அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.

உடனடியாக அவர் மீட்கப்பட்டு உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காகத் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்ட அவருக்கு, அறுவை சிகிச்சை மூலம் உடலில் இருந்த குண்டு அகற்றப்பட்டது. தற்போது அவர் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார். இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் பர்சமானியா அரண்மனை பகுதியில் பாதுகாப்புக்காகக் குவிக்கப்பட்டனர். தாக்குதல் நடத்திய சுனிதா சிங்கை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்த துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர்.

இது குறித்து கூடுதல் எஸ்பி பிரேம் லால் குர்வே கூறுகையில், ‘முதற்கட்ட விசாரணையில் சொத்து பிரச்னை காரணமாக இந்தத் தாக்குதல் நடந்தது தெரியவந்துள்ளது. உரிமம் பெற்ற துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது, சட்ட நடவடிக்கை தொடரும்’ என்று தெரிவித்தார். அரசியல் செல்வாக்கு மிக்க அரச குடும்பத்தில் நடந்த இந்தத் துப்பாக்கிச்சூடு சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: