கொல்கத்தா கலெக்டர் அலுவலகத்தில் தீ; 4,000 வாக்குப்பதிவு இயந்திரங்கள் எரிந்து நாசம்: தேர்தல் முடிவுகளில் முறைகேடா என சந்தேகம்

 

கொல்கத்தா: கொல்கத்தாவில் உள்ள அரசு அலுவலகத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 4000 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் எரிந்து நாசமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவின் அலிப்பூர் பகுதியில் உள்ள புதிய நிர்வாக கட்டிடத்தில் கடந்த 10ம் தேதி பயங்கர தீ விபத்து நடந்தது. இந்த கட்டிடத்தின் ஒன்பதாவது தளத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த சுமார் 4,000 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தீயில் கருகி முற்றிலும் நாசமடைந்தன. இதில் நடப்பு ஆண்டு சட்டசபை தேர்தலில் 10 தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட இயந்திரங்களும், 2024ம் ஆண்டு பொதுத்தேர்தலில் 5 தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட இயந்திரங்களும் அடங்கும்.

இந்த சம்பவம் திட்டமிட்ட சதி செயலா அல்லது விபத்தா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து மாநில தீயணைப்பு மற்றும் அவசரக்கால சேவைகள் துறை இணை அமைச்சர் கவுஷிக் சவுத்ரி கூறுகையில், ‘தீ விபத்து ஏற்பட்ட விதம் இயல்பானதாக தெரியவில்லை. இரண்டாவது மற்றும் மூன்றாவது தளங்களில் தொடங்கிய தீ, இடையில் உள்ள தளங்களை பெரிய அளவில் பாதிக்காமல் நேரடியாக ஒன்பதாவது தளத்திற்கு பரவியது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது’ என்று தெரிவித்தார்.

இதற்கிடையே, முக்கிய ஆதாரங்களை அழிப்பதற்காக இந்த தீ வைக்கப்பட்டதா என திரிணாமுல் காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது. தடயவியல் நிபுணர்களின் ஆய்வுக்கு பின்னரே தீ விபத்திற்கான உண்மை காரணம் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: