காதல் கணவருடன் தான் செல்வேன் என்று கூறியதால் போலீஸ் ஸ்டேஷனில் மகளை குத்திக் கொன்ற தந்தை: உத்தரபிரதேசத்தில் பயங்கரம்

 

பாண்டா: காதல் கணவருடன் செல்வேன் என்று பிடிவாதம் பிடித்த மகளை காவல் நிலையத்திலேயே தந்தை குத்திக் கொன்றார். உத்தரப்பிரதேச மாநிலம் பாண்டா மாவட்டம் படவுசா பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம்பெண், தனது வீட்டின் அருகே வசிக்கும் வாலிபர் ஒருவரை காதலித்து வந்தார். இவர்கள் இருவருக்கும் கடந்த மே 18ம் தேதி திருமணம் நடந்த நிலையில், பெண்ணின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அவர்களைத் தேடி வந்தனர். பின்னர் அந்தப் பெண்ணைப் பத்திரமாக மீட்ட போலீசார், விசாரணை மற்றும் அறிவுரை வழங்குவதற்காக காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அங்கு பெண்ணின் பெற்றோரும் வரவழைக்கப்பட்டு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

காவல் நிலையத்தில் நடந்த பேச்சுவார்த்தையின் போது, தான் காதலித்து திருமணம் செய்த கணவருடன் தான் செல்வேன் என்று அந்தப் பெண் உறுதியாகத் தெரிவித்தார். அதிகாரிகள் மற்றும் உறவினர்கள் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவர் கேட்காததால் ஆத்திரமடைந்த தந்தை, தான் மறைத்து வைத்திருந்த கூர்மையான கத்தியால் மகளின் வயிற்றுப் பகுதியில் சரமாரியாகக் குத்தினார். ரத்த வெள்ளத்தில் சரிந்த அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போதும், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து பாண்டா எஸ்பி பலாஷ் பன்சால் கூறுகையில், ‘மீட்கப்பட்ட பெண்ணின் தந்தை, காவல் நிலையத்திலேயே தாக்குதல் நடத்தியதில் அவரது மகள் உயிரிழந்தார். தாயின் புகாரின் பேரில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு, தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்’ என்று தெரிவித்தார். பிரேத பரிசோதனைக்கு பின் மேலதிக விசாரணை நடந்து வருகிறது.

Related Stories: