அரசு மருத்துவமனையில் ஆய்வு; அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை நோயாளிகள், உறவினர்கள் முற்றுகை: திருவண்ணாமலையில் பரபரப்பு

 

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவனையில் அமைச்சர் ஆதவ்அர்ஜூனா இன்று ஆய்வு செய்தார். அப்போது அவரை நோயாளிகள், உறவினர்கள் திடீரென முற்றுகையிட்டனர். மருத்துவமனையில் சிகிச்சைக்கு லஞ்சம் கேட்பதாகவும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை எனவும் சரமாரி புகார் தெரிவித்தனர். திருவண்ணாமலையின் பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள பொதுப்பணி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா இன்று மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் ஆய்வு செய்ய வந்தார். இன்று காலை திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அமைச்சர் ஆதவ்அர்ஜூனா ஆய்வு செய்தார்.

அப்போது நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். இதையடுத்து ஆய்வுக்கு பின் வெளியே வந்தார். அவரை அங்கிருந்த நோயாளிகள் மற்றும் நோயாளிகளின் உறவினர்கள் திடீரென முற்றுகையிட்டனர். மருத்துவமனையில் எதற்கெடுத்தாலும் லஞ்சம் கேட்கின்றனர். லஞ்சம் கொடுத்தால்தான் சிகிச்சை அளிப்பது உள்ளிட்ட வேலைகள் நடக்கிறது. பணம் தராவிட்டால் எந்த வேலையும் நடக்கவில்லை. ஏழைகளான எங்களிடம் எதற்கெடுத்தாலும் பணம் கேட்டால் எப்படி தருவது? அதேபோல் மருத்துவமனையில் குடிநீர் வசதி இல்லை.

கழிவறையும் சுகாதாரமாக பராமரிக்கவில்லை. தண்ணீர் வசதியும் இல்லை என சரமாரியாக புகார் தெரிவித்து அமைச்சரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதைக்கேட்ட அமைச்சர் ஆதவ்அர்ஜூனா, நீங்கள் தெரிவித்த புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். அரசு மருத்துவமனையில் ஆய்வுக்கு வந்த அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை, நோயாளிகள், உறவினர்கள் முற்றுகையிட்டு புகார் தெரிவித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: