காஞ்சிபுரம், ஆவடி, பெருங்குடி பகுதியில் நள்ளிரவில் கடும் அவதி: தொடர் மின்வெட்டால் மக்கள் மறியல் சாலையில் தஞ்சமடையும் அவலம்

 

சென்னை: காஞ்சிபுரம், ஆவடி மற்றும் பெருங்குடி பகுதியில் நேற்றிரவு மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடுமையான மின்வெட்டு ஏற்படுகிறது. முன்னறிவிப்பின்றி இரவு நேரங்களில் ஏற்படும் இந்த மின்தடைகளால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். நேற்றும் சில இடங்களில் மின்தடை ஏற்பட்டதால் மக்கள் அவதிப்பட்டனர். அதன் விவரம்: ஆவடி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் சுமார் 10,000 வீடுகள் உள்ளன. இங்குள்ள பகுதியில் அதிகாலை 3 மணிக்கு திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது.

இதனால் வீடுகளில் மக்கள் கடும் அவதிக்குள்ளானார்கள், மின்வாரிய அலுவலகங்களை தொடர்பு கொண்டபோது சரியாக பதிலளிக்கவில்லை. ஆத்திரமடைந்த பொதுமக்கள் மின்சார அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மேலும் 500க்கும் மேற்பட்டோர், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து ஆவடி போலீசார் விரைந்து சென்று பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் பொதுமக்கள், ‘மின்சாரம் கிடைக்கும் வரை போராட்டத்தை விட போவதில்லை’ என்றனர். சுமார் 7 மணியளவில் மீண்டும் மின்சாரம் வந்தது. அதற்கு பிறகே போராட்டத்தை மக்கள் கைவிட்டனர். காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மாதமாகவே இரவு நேரங்களில் மின்வெட்டு நிகழ்ந்து வருகிறது.

நேற்றிரவும் காஞ்சிபுரம் பகுதிகளில் 4 மணி நேரத்துக்கு மின்வெட்டு ஏற்பட்டது. இதனால் காஞ்சிபுரம் மாநகரமே இருளில் மூழ்கியது. குறிப்பாக, ஏகாம்பரநாதர் கோயில் தெரு, பாண்டவ பெருமாள் கோயில் தெரு, ஒபி.குளம் தெரு, மாண்டுகணீஸ்வரர் கோவில் தெரு,பல்லவர்மேடு உள்பட பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு முதல் இன்று காலை வரை தொடர் மின்வெட்டு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள், வீட்டுவாசலில் அமர்ந்தும், சாலையோரமாக படுத்து தூங்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். நீண்ட நேரத்துக்கு பிறகு மீண்டும் மின்சாரம் வந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், தற்போதைய தவெக அரசை நம்பி வாக்களித்தோம்.

தமிழ்நாடு அரசின் கண்காணிப்பில் இந்த தொடர் மின்வெட்டு பிரச்னையை தமிழக முதல்வர் உடனடியாக கையில் எடுத்து, நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர். துரைப்பாக்கம்: சென்னை பெருங்குடி பகுதியிலும் கடந்த சில நாட்களாக மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. இதுபற்றி சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் செய்தால் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. இந்நிலையில் பெருங்குடி டெலிபோன் நகர் 17வது குறுக்கு தெரு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று பகல் 11 மணியளவில் மின்வெட்டு ஏற்பட்டுது.

4 மணி நேரம் தாமதமாக பிற்பகல் 3 மணியளவில்தான் மின்சாரம் வந்தது. பிறகு இரவு 7 மணிக்கு மின்சாரம் தடைபட்டது. இரவு முழுவதும் வரவில்லை. மின்வாரிய அலுவலகத்துக்கு சென்று நேரில் முறையிட்டால் எந்த பதிலும் சரியாக கூறுவதில்லை. இதனால் மக்கள் இரவு முழுவதும் தூங்க முடியாமல் தவித்தனர்.

Related Stories: