நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் அலங்காநத்தம் பகுதியை சேர்ந்தவர் கனகராஜ் (60), விவசாயி. இவருக்கும், அவரது மகனுக்கும் இடையே கடந்த சில நாட்களாக சொத்து தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில், கனகராஜ் புதிதாக கழிப்பறை கட்டியுள்ளார். ஆனால், அதனை கட்டக்கூடாது என மகன் தடுத்து நிறுத்தி விட்டார். இதனால் தந்தை, மகன் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் மருமகள், நாமக்கல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், தனது மாமனார் தனக்கு பாலியல் தொல்லை அளிப்பதாக புகார் தெரிவித்தார்.
இதனால் மனமுடைந்து போன கனகராஜ் நேற்று முன்தினம், வீட்டில் விஷம் குடித்து மயங்கினார். இதை பார்த்து அருகில் இருந்தவர்கள், அவரை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று காலை அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, மகன், மருமகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
