சென்னை: சென்னையில் இருந்து விமானத்தில் மலேசியாவிற்கு கடத்த முயன்ற ரூ.5 கோடி மதிப்பிலான உயர்ரக போதை பொருட்களை மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்தனர். நீலகிரியை சேர்ந்த சிவயோகேஸ்வரன் என்பவரது பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 5 கிலோ எடை கொண்ட கிரிஸ்டல் மெத்தபேட்டமைன் போதை பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தமிழக தலைநகர் சென்னையிலிருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு இந்த போதை பொருளை கடத்தி செல்ல திட்டமிட்டு இருந்த நீலகிரியை சேர்ந்த 25 வயது இளைஞரான சிவயோகேஸ்வரன் கைது செய்யப்பட்டுள்ளார். கோலாலம்பூர் செல்லவிருந்த விமானத்தில் பயணிப்பதற்காக சிவயோகேஸ்வரன் சென்னை விமான நிலையம் வந்தார். அவரது உடைமைகளை அதிகாரிகள் தீவிர சோதனைக்கு உட்படுத்தியபோது, ரகசியமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த இந்த போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, போதைப்பொருளைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்த இளைஞரைக் கைது செய்து, இந்த கடத்தலின் பின்னணியில் உள்ள சர்வதேச கும்பல் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
