பெண் குழந்தைகளுக்கு எதிராக தொடரும் பாலியல் வன்கொடுமைகள் பொய்க்கால் குதிரை அரசு வேடிக்கை பார்க்கிறது: அதிமுக பகிரங்க குற்றச்சாட்டு

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை, மழை விட்டும் தூவானம் விடவில்லை என்பதுபோல, பொய்க்கால் குதிரை அரசு அமைந்து ஒரு மாதம் முடிவடையும் நிலையிலும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிப்பது கண்டு மக்கள் கொதித்தெழுந்துள்ளனர். தவெக ஆட்சியில் 3 வயது பெண் குழந்தையைக்கூட சீரழிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் தொடர்ந்து நடைபெறுகிறது. ஆனால், இதையெல்லாம் தடுத்து நிறுத்த வேண்டிய முதல்வரோ சினிமா வசனங்களை பேசிக்கொண்டிருக்கிறார். பொதுவாக இளைஞர்கள் தங்களது எதிர்கால வாழ்க்கையை நிர்ணயிக்கக்கூடிய படிப்பு, அவற்றை அடைவதற்கான வழிமுறைகள், பெரியவர்களை மதித்தல் போன்றவைகளுக்கு வழிகாட்ட வேண்டிய முதல்வர், போகாத ஊருக்கு வழிகாட்டும் வேலையை நடத்திக்கொண்டிருப்பது வெட்கக்கேடான ஒன்றாகும்.

ஒரு தலைமுறை பாழாகும் சூழ்நிலை தற்போதைய ஆட்சியாளர்களால் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் ஒவ்வொரு பெற்றோர்களின் மனதிலும் எழுந்துள்ளது. முடிந்தால் இளைய சமுதாயத்தினரை இந்த அரசு நல்வழிப்படுத்தும் பணிகளில் இதய சுத்தியோடு ஈடுபட வேண்டும். தவறினால் தமிழ் சமுதாயம் இந்த ஆட்சியாளர்களையும், ஆட்சியை வழிநடத்துபவர்களையும் மன்னிக்காது என்று எச்சரிக்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: